பா.ச.க.வின் இராமர் கோயிலும் இரகசியத் திட்டங்களும்!
பா.ச.க.வின் இராமர் கோயிலும் இரகசியத் திட்டங்களும்!
மதச்சார்பின்மையும், சனநாயகமும்தான் ‘இந்தியா’ என்ற தேசிய நாணயத்தின் இரண்டு பக்கங்களாக அமைந்திருக்கின்றன. அதுவே நம் இந்திய மண்ணிற்கான பெருமைமிகு அடையாளம். ஆனால், இந்த இரு பக்கங்களுக்குமே அண்மைக்காலமாகப் பங்கம் விளைவிக்கப்பட்டு வருவது எதிர்கால இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை, சமூக ஒற்றுமையை, மத நல்லிணக்கத்தை, மக்கள் மன்றத்தின் மாண்பை, ஏன் அரசியல் நாகரிகத்தையே பெரும் கேள்விக்கு உள்ளாக்கி வருகிறது.
‘அரசியலில் இருந்து மதத்தைப் பிரிக்க முடியாது’ என்று எண்ணிய தேசப்பிதா மகாத்மா காந்தி, ‘அரசியல் அறவழிப் பட்டதாக அமைவதற்கு மதம் உறுதுணையாக இருக்கும்’ என்று நம்பினார். ஆனால், இன்று மதம் வகுப்புவாதமாக வளர்ந்துவிட்டது; தனிமனிதன் சர்வாதிகாரியாக மாறுவதற்குச் சாமரம் வீசுகிறது. மதமும், அரசியலும் ஏனோ சுயநலன்களின் ஊற்றுக்கண்களாக மாறிவிட்டன? 2019, நவம்பர் 9 - ஆம் நாளில் ‘நீதி’ தங்களுக்குச் சாதகமாக வளைக்கப்பட்டு, அன்று 1528-இல் அயோத்தியில் பாபரின் படைத்தளபதி மீர் பாகி கட்டிய பாபர் மசூதி இருந்த இடத்தில், ரூ.3,500 கோடி நன்கொடை நிதி சாதுரியமாகத் திரட்டப்பட்டு, அதில் ரூ.1,800 கோடிக்கு (மொத்தத் தொகையில் 51.4ரூ) 70 ஏக்கர் கொண்ட ஒட்டுமொத்தப் பரப்பளவில், 2.7 ஏக்கர் பரப்பளவுக்கு, இன்று 161 அடி உயர சிறப்புமிகு கோயில் இராமருக்குக் கட்டப்பட்டுள்ளது.
அனைத்தும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அறக்கட்டளையின் முன்னெடுப்பில் கோயில் கட்டுமானப் பணிகள் நடந்தேறியதாக நாம் எண்ணினாலும், ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்கள், பா.ச.க.வின் அரசியல் ஆளுமைகளின் தலை யீடுகள் இல்லாமல் இல்லை என்பதை நாடறியும்; ஏன் உலகே அறியும்! ‘இது இராமருக்கு எடுக்கப்படும் விழாவா? இல்லை, தனிமனிதர் ஒருவருக்காக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து எடுக்கப்படும் விழாவா?’ என்ற கேள்வி சாமானியனிடம் எழாமல் இல்லை. ‘நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி, புல்லுக்கும் அங்கே பொசியுமாம்’ என்ற ஒளவையாரின் மூதுரைப் பாடல் வரிகள் இன்று மாற்றியமைக்கப்படும் அளவுக்கு, ‘புல்லுக்காகவே’ நீர் இறைக்கப்பட்டது போல தோன்றுகிறது. பிரிவினையை, நய வஞ்சகத்தை, அமைதியற்ற சூழலை முன்வைத்தத் திட்டங்களை நிறைவேற்றிவிட்டு, இன்று ‘ஒற்றுமையின் அடையாளம் இது’ என்று ‘காவிக்’ கூட்டத்தார் ‘கூவிக்’ கொண்டிருக்கிறார்கள்.
ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை நீக்கி விட்டார்கள்; பொது சிவில் சட்டத்தை ஏறக்குறைய நடைமுறைப்படுத்தத் துவங்கிவிட்டார்கள்; இன்று இராமருக்குக் கோயிலும் கட்டிவிட்டார்கள். ‘மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்போம்’ என்று கொக்கரிக்கும் பா.ச.க.வைப் பொறுத்த வரை, 2024 மக்களவைத் தேர்தல் வெற்றி உறுதியாகிப்போனது போலவும், அதனை அமோக வெற்றியாக்குவதே திட்டம் போலவும், தலைவர்களின் மேடைப் பேச்சுகள், ஊடகச் செய்திகள், சுற்றறிக்கைகள் அனைத்தும் கட்டமைக்கப்படுகின்றன.
“பத்தாண்டுகள் பா.ச.க. ஆட்சியில் குறிப்பிடத்தக்கச் சாதனைகள் இல்லாததால்தான், இராமர் கோயில் விழாவை முன்னிறுத்தி அரசியல் செய்கிறார்கள்” என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாகவே நீடிக்கிறது. இதுவே மிகப்பெரிய சாதனையாகத் தேர்தல் களத்தில் எதிரொலிக்கச் செய்ய வேண்டும் என் பதே அவர்களின் திட்டமாகவும் இருக்கிறது. ஆகவே, நாம் மிகவும் விழிப்பாய் இருக்க வேண்டிய தருணம் இதுவே!
1952, 1957, 1962 எனத் தொடர்ச்சியாக மூன்று முறை வென்ற நேருவின் சாதனையை, மோடி வழியாகச் சமன் செய்யும் எண்ணம் கொண்டிருக்கிறது பா.ச.க. ஆகவேதான், தேர்தலுக்கு முன்பாகவே ‘இவர்தான் பிரதமர் வேட்பாளர்’ என்பதில் உறுதியாக இருக்கிறது பா.ச.க. அப்படியே வெற்றி பெற்றாலும், தேர்தலுக்குப் பிறகு தலைமைக்கான மாற்றம் இருக்கும் என்பதும் அரசியல் விமர்சகர்களின் கணிப்பாகவும் இருக்கிறது. பின் வரிசையில் ஒருவர் காவி உடையில் ஓடி வருவதையும் அவர்கள் கணிக்கத் தவறவில்லை.
‘இக்கோயில் புதிய சகாப்தத்தின் வருகை’ என்று பிரதமரும், ‘ஒட்டுமொத்த தேசமும் இராம மயமாகிவிட்டது; இது நமது தேசப் பெருமையைப் பறைசாற்றும் அடையாளம்; இங்கு இராம இராஜ்யம் பிரகடனமாகி விட்டது’ என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், ‘இராம இராஜ்யம் நெருங்கி விட்டது; இந்தியாவின் சுயமரியாதை திரும்பியுள்ளது; இது புதிய இந்தியாவின் அடையாளமாக மாறியுள்ளது’ என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தும் கருத்துத் தெரிவித்துள்ள சூழலில், “அயோத்தியில் இராமர் கோயில் திறப்பு நிகழ்ச்சிக்குப் பா.ச.க. அரசியல் வடிவம் கொடுத்துள்ள விதமும், அரசியலில் மதத்தைக் கலக்க அக்கட்சி முயற்சித்துள்ளதும் மிகவும் வருந்தத்தக்கது; வேதனைக்குரியது” என்று மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் தெரிவித்ததை மறந்துவிடக் கூடாது.
இது தேசிய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் ஒட்டுமொத்த இந்தியர்களாலும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று; இதை வெறும் சமயம் சார்ந்த ஒன்றாகப் பார்க்காமல், மத உணர்வுகளை மீறிய பாரதத்தின் பெரும் தேசிய அடையாளமாகப் பார்க்க வேண்டும் என்று கூறும் இவர்கள்தான் தங்கள் கருத்தியலிலும், செயல்பாடுகளிலும் முரண்பட்டு நிற்கிறார்கள்.
• இது இராம இராஜ்யத்தின் அடையாளம்; இராம இராஜ்யம் என்பது இந்து இராஜ்யம் அல்ல; அனைவருக்குமான சமய நல்லிணக்கத்தின் அடையாளமான ‘சனாதன தர்மம்’ என்கிறார்கள். ‘சனாதன தர்மம்’ என்பது அடிப்படையிலேயே சமத்துவத்திற்கும், சமய நல்லிணக்கத்திற்கும், மானுட வாழ்வியலுக்கும் முற்றிலும் புறம்பானது என்பதை ஏனோ இவர்கள் அறியவில்லை.
• ‘இந்தியாவில் உள்ள அனைவரும் பிறப்பால் இந்துகள். நம்பிக்கையால் அவரவர் விரும்பும் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டவர்கள்தாம். ஆகவே, அடிப்படையில் இவர்கள் மதம் மாறியவர்கள். ஆனால், நாளடைவில் தாய் மதத்திற்கு எதிரானவர்களாக மாறிவிட்டார்கள்’ என்கிறார்கள். இங்கே காந்தியின் சொல்லாடல் நினைவூட்டப்பட வேண்டும். “நான் கிறிஸ்துவின் போதனைகளை ஏற்றுக்கொள்கிறேன்; ஆனால், கிறிஸ்தவர்களை அல்ல; காரணம், அவர்கள் தங்கள் கிறிஸ்துவின் படிப்பினைகளைப் பின்பற்றுவதில்லை” என்றார். இந்திய நாட்டில் இந்து-முஸ்லீம்- கிறிஸ்தவர்-சீக்கியர்-பார் சியர்-யூதர் யாவரும் சகோதரர்களே. இந்தியத் தாயின் ஒரு தாய் பிள்ளைகளே! ஆனால், இடையில் வந்த ஆர்.எஸ்.எஸ்., பா.ச.க.வின் ‘இந்துத்துவா’ கொள்கைகளையே மற்றவர்கள் வெறுக்கிறார்களே தவிர, இந்துகளை அல்ல என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
• ‘அயோத்தியில் இராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என இந்துகள் நினைத்ததில் என்ன தவறு? ஜெருசலேமுக்காகக் கிறிஸ்தவர்கள் போராடவில்லையா?’ என விதண்டாவாதம் பேசுவதைப் பா.ச.க. நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்துகளா பாபர் மசூதியை இடித்து இராமருக்கு அதே இடத்தில் கோயில் கட்ட நினைத்தார்கள்? கரசேவகர்களும், காவிக்கூட்டங்களும், பா.ச.க.வுமே என்பதை நாடறியுமே!
• கிறிஸ்தவர்களின் வத்திக்கானுக்கு (9 மில்லியன்), இஸ்லாமியர்களின் மெக்காவுக்கு (92 மில்லியன்) சுற்றுலாப் பயணிகள் செல்கிறார்கள். அவற்றிற்கும் கூடுதலாக அயோத்திக்குச் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்ற ஒப்பீடே பல செய்திகளை உள்ளே பொதித்து வைத்திருக்கிறது.
ஆகவே, விடுதலை இந்தியாவின் வரலாறும், ‘இந்தியர் யாவரும் என் உடன்பிறந்தோர்’ என்ற உறுதிமொழியும் இவர்களுக்கு நினைவூட்டப்பட வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் பன்முகத்தன்மை இன்று சிதைக்கப்படுவது பெரும் கவலையளிக்கிறது. இங்குக் கோயில்களுக்குத் தரிசனம் செல்வதும், கோயில் திறப்பு விழாக்கள் நடத்துவதும், மதத்தால் நாட்டைக் கட்டமைப்பதும் மட்டுமே பிரதமருக்கான பணிகள் அல்ல; வருவாய்-வேலை வாய்ப்பு-வறுமை ஒழிப்பு-கல்வி மேம்பாடு-அறிவியல் வளர்ச்சி-பாதுகாப்பு... எனப் பல துறைகளில் கவனம் செலுத்தி நாட்டை வளர்ச்சிப் பாதை நோக்கி, சமத்துவ- சகோதரத்துவ உணர்வுடன் வழிநடத்த வேண்டும் என்பதே ஒரு சாமானியனின் எதிர்பார்ப்பு!
அன்புத் தோழமையில்,
அருள்பணி. செ. இராஜசேகரன்
Comment