No icon

விடியல் தேடும் விவசாயிகள்:

மீண்டும் டில்லி முற்றுகைப் போராட்டம்!

‘பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

அணியென்ப நாட்டிற்குஇவ் வைத்து’  (குறள் 738)

நோயற்ற வாழ்வு, நிறைந்த செல்வம், மிகுதியான விளைச்சல், இன்பமான வாழ்வு, உரிய பாதுகாப்பு ஆகிய இவை ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு என்கிறார் உலகப் பொதுமறை தந்த ஐயன் வள்ளுவர். ஒரு நாட்டிற்கு அழகூட்டும் இவை ஐந்தும் இந்தியத் திருநாட்டில் சீர்குலைந்து, சிதைந்து கிடப்பதே பெரும் வேதனைக்குரியது. அதிலும் குறிப்பாக, 70 விழுக்காடு விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் மக்களைக் கொண்ட இந்த நாட்டிலே விவசாயம் கண்டுகொள்ளப்படாமலிருப்பதும், விவசாயிகள் புறக்கணிக் கப்படுவதும், அவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்திற்கான கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதும், விளைநில வளங்கள் ஒருசில பெருமுதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வண்ணம் சட்டங்கள் ஏற்படுத்தப்படுவதும், மண்ணின் பூர்வக் குடிகள் அடித்து விரட்டப்படுவதும் போன்ற செயல்களால் ‘இந்தியாவை இருள் சூழ்ந்திருக்கிறது’ என்றே எண்ணத் தோன்றுகிறது.

இன்று உழவர் சந்திக்கும் இடர்கள் ஏராளம். விவசாய இடுபொருள்களின் விலை அதிகரித்துவிட்டது; வங்கிக் கடன் கிடைப்பது குறைந்துவிட்டது; விவசாயத்தில் அரசின் முதலீடு சுருங்கிவிட்டது; உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படும் விளைநில அளவும் சுருங்கி வருகின்றது. விளைபொருளுக்கான நியாயமான விற்பனை விலை இல்லை. பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லை. ஏழை மக்களுக்குத் தரப்படும் விலையை விட, மிகக் குறைந்த விலைக்குப் பல மில்லியன் டன் உணவுப் பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்கு ஏழைகளுக்குக் கிடைக்காத தானியம், மிகவும் குறைந்த விலையில் ஐரோப்பிய நாடுகளில் கால்நடைகளுக்குத் தீவனமாக அனுப்பப்படுகிறது எனும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இத்தகைய சூழலில், கடும் குளிரையும், வாட்டும் வெயிலையும், கொடிய பசியையும், நெடிய மழையையும் பொருட்படுத்தாமல் 2020-ஆம் ஆண்டில் ஏறக்குறைய 13 மாதங்கள் விவசாயிகள் நடத்திய டில்லி முற்றுகைப் போராட்டம், ஒன்றிய அரசு கொடுத்த வாக்குறுதிகளால் கைவிடப்பட்டது. ஆயினும், இந்நாள்வரை அவ்வாக்குறுதிகளுக்கு எந்தத் தீர்வையும் அளிக்காத ஒன்றிய அரசு, அதற்கு மாறாக, வேளாண் சட்டங்களை இயற்றி விவசாயிகளை ஒடுக்க முயற்சிக்கிறது.

இந்நிலையில், பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதச் சட்டம் இயற்றுதல், விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்தல், எம்.எஸ். சுவாமிநாதன் குழு வழங்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல், விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல், கடந்த 2020-ஆம் ஆண்டில் நடந்த போராட்டத்தின் போதும், இலக்கீம் பூர் கேரி-யில் நடந்த வன்முறையின் போதும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நீதி மற்றும் இழப்பீடு வழங்குதல், நிலம் கையகப்படுத்துதல் 2013 சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துதல், உலக வர்த்தக அமைப்பிலிருந்து வெளியேறுதல் போன்ற விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கான அடிப்படைக் கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற முழக்கங்களோடு மீண்டும் விவசாயிகளின் டில்லி முற்றுகைப் போராட்டம் துவங்கியுள்ளது.

‘அடிப்படை வாழ்வாதார உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் அரசியல் சட்டத்தின் மூலம் சுதந்திர சனநாயக அரசு அமைய வேண்டும்’ என்று கனவு கண்டார் காந்தியடிகள். ஆனால், இன்று தங்கள் வாழ்வாதார உரிமைகளுக்காகப் போராடும் விவசாயிகளுக்கு, அரசு எந்த உத்தரவாதமும் அளிப்பதில்லை. பெரும் முதலாளிகளைப் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்கும் மோடி அரசு, ஏழை விவசாயிகளைத் தடுப்புச் சுவர் கொண்டும், கண்ணீர் புகை கொண்டும் அடக்கப் பார்க்கிறது; அவர்களை ஒடுக்கப் பார்க்கிறது.

2014, தேர்தலின்போது மோடியின் ‘குஜராத் மாடலால்’ இந்தியாவில் பாலாறும், தேனாறும் தானாகப் பாய்ந்தோடும் என்று வாக்குறுதி தந்தது ஒன்றியத்தை ஆளும் பா.ச.க. ஆனால், ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து பத்து ஆண்டுகள் கடந்த பின்பும் ஏழைகள் இருக்கும் இடத்தில் பாலாறும் பாயவில்லை; தேனாறும் தென்படவில்லை. பள்ளம் தேடியே தண்ணீர் பாயும். ஆனால், மோடி அரசின் ஆட்சிக் காலத்தில் பயன் பெற்றவர்கள் மேட்டுக்குடி வர்க்கமே தவிர, பள்ளத்தில் இருக்கும் பாமர ஏழைகள் அல்லர்.

இவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வழங்கிய வாக்குறுதிகளை நினைவில் கொள்வதில்லை. காரணம், தேர்தல் அறிக்கைகளும், தேர்தல் நேரத்து வாக்குறுதிகளும் கவனத்தை ஈர்க்கும் கவர்ச்சித் திட்டங்கள்தானே தவிர, செயல்பாட்டு வரைவுகள் அல்ல! அவைகள் யாவும் தூண்டிலில் இடப்பட்ட மண்புழுக்கள்தான். இவை மீனைப் பிடிப்பதற்குத்தானே தவிர, மீனுக்கு உணவூட்ட அல்ல; வாக்குறுதிகள் யாவும் வாக்காளர்களை ஏமாற்றும் வசீகர உத்திகளே தவிர, வாழ்வியல் நெறிமுறைகள் அல்ல; இவர்களிடம் இலவச அறிவிப்புகள் தவிர,  ஏழ்மையை அகற்றும் எந்தவொரு பொருளாதார நடவடிக்கைகளும் இருப்பதில்லை.

இத்தகைய சூழலில், மோடி அரசின் பத்தாண்டு காலச் செயல்பாடுகளைக் குறித்து எதிர்க்கட்சிகள் ஓராயிரம் கேள்விகளையும், குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து முன்வைக்கும் நிலையில், அவற்றுக்கு உரிய பதிலை அளிக்காமலே பத்து ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்திருக்கிறார் ஒன்றிய முதன்மை அமைச்சர் மோடி.

மோடி அரசின் பத்தாண்டு காலத் தோல்விகளை 54 பக்கங்கள் கொண்ட ‘கறுப்பு அறிக்கை’யாக வெளியிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மோடி ஆட்சியில் தலைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதாரச் சீரழிவு போன்றவற்றைக் குற்றச்சாட்டுகளாகப் பட்டியலிட்டிருக்கிறார். அதே வேளை யில், ‘மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்டபூர்வ உத்தரவாதம் வழங்கப்படும்’ எனவும் அறிவித்திருக்கிறார். ராகுல் காந்தியும் இதே கருத்தை வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

ஆயினும், முன்னெடுத்திருக்கும் இம்முற்றுகைப் போராட்டத்தை எக்காரணத்தை முன்னிட்டும் வெற்றியின்றித் திரும்பப் பெறுவதில்லை என்றும், கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறிய பின்னரே, போராட்டத்தைக் கைவிடுவோம் என்றும் சூளுரைத்துள்ளனர் விவசாயிகள்.

‘மக்கள்... மக்கள் மட்டுமே உலக வரலாற்றை உருவாக்குவதில் உந்துசக்தியாக இருக்கிறார்கள்!’ என்கிறார் மாவோ. அத்தகைய மாற்றத்தை உருவாக்கும் மக்களுக்கு அன்றாடம் உணவளிக்கும் விவசாயிகள் இன்று இந்தியாவின் புதிய வரலாற்றை எழுத தலைநகர் நோக்கி திரண்டு வருகிறார்கள்.

மாற்ற முடியாதது என்று ஏதுமில்லை; வீழ்த்தவே முடியாதது என்றும் எதுவுமே இல்லை. அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம், பொருளாதார மாற்றம், சமூக மாற்றம், ஒட்டுமொத்த வாழ்வியல் மாற்றம் தேடுகிற இந்த உழவர் கூட்டம் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு, நாம் தார்மீக ஆதரவளிப்போம், உழவர் வாழ்வு மேம்பட பாதை அமைப்போம்!

அன்புத் தோழமையில்,

அருள்பணி. செ. இராஜசேகரன்

Comment