No icon

திருத்தலப் பேராலயமாக உயர்த்தப்படும் ஓரியூர் திருத்தலம்!

என் இனியநம் வாழ்வுவாசகப் பெருமக்களே!

மறவ நாட்டு மாணிக்கம், ஓரியூரின் ஒளி விளக்கு, தன் குருதியால் செந்நீர் காவியம் படைத்த செம்மண் புனிதர் புனித அருளானந்தரின் புண்ணிய பூமியாம் ஓரியூர் திருத்தலம் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தற்போதுதிருத்தலப் பேராலயமாக’(Minor Basilica) உயர்த்தப்பட்டிருக்கிறது.

அன்று, தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாகக் கருதப்பட்டு, விடுதலை உணர்வு வீறுகொண்டிருந்த தென் தமிழகத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள இராமநாதபுரம் மாவட்டத்தின் வடகோடி எல்லையில் உள்ளது ஓரியூர் எனும் இப்புண்ணிய பூமி. இம்மண்ணுக்கென்று தனியொரு மகிமை உண்டு. இது செம்மண்! இம்மண்ணிலே ஒரு மாபெரும் வரலாறே புதைந்து கிடக்கிறது.

17-ஆம் நூற்றாண்டில் பாம்பாற்றின் தென் கரையில் வெறும் மண் மேடாகவும், மரங்கள் நிறைந்த காடாகவும் காட்சி தந்து, ‘திட்டைஎன அறியப்பட்ட இந்த ஊர்தான், இன்று இறைநம்பிக்கையாளர்களின் அருள்தலமாக, இறையழைத்தலின் விளைநிலமாக அடையாளப்படுத்தப்படுகிறது. ‘அருள்பொங்கிடவும், அழைத்தலில்ஆனந்தம்கண்டிடவும், இம்மண்ணுக்கும், மக்களுக்கும் உறவாய், உயிராய், உச்சமாய் இருப்பவர் அருள் ஆனந்தரே!

போர்த்துக்கல் நாட்டில், லிஸ்பன் நகரில் 1647-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாள் பிறந்து, இறை அழைத்தலை ஆழமாக உணர்ந்து, தனது பதினாறு வயதில் இயேசு சபையில் சேர்ந்து (1662, டிசம்பர் 17), 1673-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் (நம்பிக்கையில் எழும் தரவு) இறைப்பணியாளராய்த் திருநிலைப்படுத்தப்பட்டு, இறைச் சித்தம் நிகழ மறவ நாட்டில் மறைபரப்புப் பணிக்குத் தன்னையே அர்ப்பணிக்கும் தணியாத் தாகம் கொண்டு, ஆறு மாத கடுமையான கடல் பயணத்தின் நிறைவில், 1673-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ஆம் நாள் இந்தியா வந்தடைந்தார் இப்புனிதர் அருளானந்தர்.

மனம் மாறுங்கள், நற்செய்தியை நம்புங்கள்எனக் குரல் எழுப்பி, மக்களை யோர்தான் நதியில் திருநீராட்டிய திருமுழுக்கு யோவானை அடையாளப்படுத்தும் வண்ணம், மறவ நாட்டின் பட்டி தொட்டியெங்கும் நடந்தே சென்று, பாமர மக்களைச் சந்தித்து, உண்டு உறவாடி, உறவால் பிணையப்பட்டு, கிறிஸ்துவை அறிவித்து, மக்களுக்குத் திருமுழுக்கு வழங்கி அவர்களைமெய் மறையில் சேர்த்தார். “ஏழைகளுக்கு நற்செய்தி அறிவித்து” (லூக் 7:22), அவர்கள் வாழ்வியலோடு தன்னை உடையிலும், உறவிலும், கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் இணைத்துக் கொண்டதால்ஜான் தே பிரித்தோவாகத் திருநீராட்டப்பட்ட இவர், அருளானந்தராக அறியப்பட்டு, பின்புபண்டார சுவாமியாக மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். திருமுழுக்கு யோவானின் மறைச்சாட்சியம் போன்றே, அவர் வழியில்உண்மைக்குச் சான்று பகரஉண்மையின் வழி நின்று, தடியத் தேவனுக்கு அறவழி காட்டியதால் தலை வெட்டுண்டு, இறுதியில் தன் குருதியால் அவ்விடத்தை நனைத்து, செம்மண் புனிதராய் மறைச்சாட்சியானார்.

திருமுழுக்கு யோவானின் மரணம், இயேசுவின் ஆன்மிக-சமூக விடுதலைப் பணி வாழ்விற்குப் பாதை வகுத்ததுபோல, அருளானந்தரின் தியாக மரணம் இம்மண்ணில் திரு அவையை ஆழமாக வேரூன்றச் செய்து, நிறைபலன் அளிக்க வழிகோலியது. இரண்டாம் நூற்றாண்டில், தொடக்கக் காலத் திரு அவைத் தந்தையாக அறியப்படும் தெர்த்தூலியன் குறிப்பிடுவது போலமறைச்சாட்சியரின் குருதி திரு அவையின் வித்து’ (The Blood of Martyrs is the Seed of the Church) என்பதை நினைவூட்டுவதாகவே அவருடைய மறைச்சாட்சியம் அமைந்திருக்கிறது.

ஒருவரின் அர்த்தமுள்ள மரணம், ஒருபோதும் அலட்சியப்படுத்தப்படாது; மாறாக, அது தலைமுறை கடந்தும் அடையாளப்படுத்தப்படும் என்பதுபோல, அவருடைய  திடமான வாழ்வுக்காக, துணிச்சலான பணிக்காக, தியாகமான மறைச்சாட்சியத்திற்காக இன்றும் இப்புனிதர் திரு அவை வரலாற்றுப் பதிவுகளில் நினைவுகூரப்படுகிறார். உன்னதமான இலக்கிற்காகச் சிந்தப்படும் செந்நீர் ஒருபோதும் வீணாகாது என்பதை இன்றும் உணர்த்திக் கொண்டே இருக்கிறார் இப்பெரும் புனிதர்.

இறைமகன் இயேசுவின் கல்வாரிப் பாதையை உணர்த்தும் இப்புனிதரின் ஓரியூர் கொலைக்களப் பயணம் நம் கண்களைக் கலங்க வைத்து, இதயத்தை ஈரமாக்குகிறது. பாடுகளின் உச்சம் அவை! கைது, அரசன் முன் விசாரணை, சிறைவாசம், துப்பாக்கிச் சூடு, கைகளையும், கால்களையும் சங்கிலியால் கட்டி காடு, மேடு, முள்புதர்களில் இழுத்துச் சென்றது, தலைகீழாகக் கிணற்றில் இறக்கியது, குதிரையின் கால்களில் கட்டி இழுத்துச் சென்றது, ஓரியூர் திட்டை மேட்டில் தலை வெட்டுண்டது  என்று இவரின் கல்வாரிப் பயணம் கொடூரமானது. மேலும், இயேசு சிலுவையில் தொங்கியது போல, தலை வெட்டுண்ட உடல், கழுமரம் ஏற்றப்பட்டு விண்ணுக்கும், மண்ணுக்கும் இடையே தொங்கவிடப்பட்டது. மரணம் கொடியது; அதிலும் உச்சம் இது. ஆயினும்,“ஒவ்வொரு நாளும் என் மரண தண்டனையை நான் எதிர்நோக்கியிருந்தேன். இதற்காகவே நான் இருமுறை இந்தியாவுக்குப் பயணம் செய்துள்ளேன். மறைச்சாட்சியம் விலைமதிக்க முடியாத இறைவனின் கொடை என்பதை நானறிவேன்; ஆகவே, இதைப் பெற எதையும் தியாகம் செய்ய நான் தயாராக உள்ளேன்எனும் ஓரியூர் சிறைச்சாலையிலிருந்து அருளானந்தர் எழுதிய இறுதிக் கடிதத்தின் குறிப்பு (1693, பிப்ரவரி.3), அவருடைய மறைப்பணித் தாகத்தையும், மறைச்சாட்சியத் தியாகத்தையும் உணர்த்துகிறது. குருவும், பலிப்பொருளும், பலிபீடமுமான இயேசுவைப் போன்று, இந்த உத்தமக் குருவும் பலியாக, ஓரியூர் மண்திட்டு எனும் பலிபீடத்தில் 1693-ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் நாள் தனது 45-ஆம் வயதில் மறைச்சாட்சியானார்.

பல்வேறு புதுமைகள், அருஞ்செயல்களின் சாட்சியத்தால் திரு அவை 1853, ஆகஸ்டு 21-ஆம் நாள் இவரை மறவ நாட்டுப் புனிதராக உயர்த்தியது. இம்மாபெரும் புனிதர் செந்நீர் சிந்தி உயிர்த்தியாகம் செய்த இப்புண்ணிய பூமியில், 1960-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் நாள் அர்ச்சிக்கப்பட்ட இத்திருத்தல ஆலயம் (Shrine), இன்று அண்மையில் நவம்பர் 9, 2023 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் திருத்தலப் பேராலயமாக (Minor Basilica) உயர்த்தப்பட்டுள்ளது.

இத்திரு நிகழ்வின் கடந்த கால வரலாற்றுப் பக்கங்களில், தொடக்கம் - முன்னெடுப்பு - வளர்ச்சிப் பணி-பேருதவி-வழிகாட்டுதல் எனப் பல நிலைகளில் முன்நின்ற ஆயர் பெருமக்கள், குறிப்பாக, மதுரை உயர் மறைமாவட்ட மேனாள், இந்நாள் பேராயர்கள், சிவகங்கை மறைமாவட்ட முதல் ஆயர் மேதகு S. எட்வர்ட் பிரான்சிஸ், இரண்டாம் ஆயர் மேதகு முனைவர் J. சூசை மாணிக்கம், திருத்தூது நிர்வாகியாக இருந்த ஆயர் மேதகு முனைவர் ஸ்டீபன் அந்தோணி, தற்போதைய ஆயர் மேதகு முனைவர் லூர்து ஆனந்தம், மதுரை மறைமாநில இயேசு சபை மேனாள்-இந்நாள் மாநிலத் தலைவர்கள், சென்னை மாகாண இயேசு சபை மாநிலத் தலைவர் அனைவரும் நம் நன்றிக்குரியோர்களே!

அன்பு இறைச் சமூகமே! வாருங்கள் ஓரியூருக்கு மார்ச் 3, 2024 அன்று! நாமும் இறைவனுக்கு நன்றி கூறுவோம். ஓரியூர் ஒளி விளக்காக அணைந்தும் அணையாமல் ஒளிவீசும் இத்தியாகச் சுடருக்கு நன்றி கூறுவோம்! அவர் வழியாக இறைவனின் அதிமிக மகிமை சிறந்தோங்கச் செய்வோம்!

அன்புத் தோழமையில்,

அருள்பணி. செ. இராஜசேகரன்

Comment