No icon

மோடி  3.0

பாதை மாறிய பயணம் !

மாபெரும் சனநாயக நாடான இந்திய நாட்டின் 18-வது மக்களவை, தேசிய சனநாயகக் கூட்டணிக் கட்சிகளால் மோடி தலைமையில் அரியணை ஏறியிருக்கிறது. பத்தாண்டுகளுக்குப் பின் இந்திய மண்ணில் ஒன்றிய அரசில் மீண்டும் கூட்டணி ஆட்சி என்பதே இந்திய அரசியலில் புதிய திருப்பமாய், பலருக்கும் வியப்பாய் இருக்கிறது. மூன்றாவது முறையாக இந்திய ஒன்றிய அரசுக்குத் தலைமை வகிக்கும் மோடி, ‘சோசலிசத் தந்தை’ நவீன இந்தியாவின் சிற்பி நேருவுடன் ஒப்பிடப்படுகிறார். இங்கே கதையும், காட்சியும் வெவ்வேறு என்பதை அரசியல் அறிந்தோர் நன்கு உணர்வர். மடு மலையுடன் ஒப்பிடப்படுகிறது!

தனித்துப் பெரும்பான்மை இன்றிக் கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் ஆட்சிக் கட்டிலில் அமரும் மோடிக்கு ஒவ்வொரு வினாடியும் நிம்மதியற்ற நிலையே! பதற்றமான சூழலே! ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட பா.ச.க.வும், வலுவான எதிர்க்கட்சியாக அமைந்துள்ள காங்கிரசும், அதன் கூட்டணிக் கட்சிகளும் இனி மக்களவையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை இத்தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். இது மக்களாட்சிக்குக் கிடைத்த வெற்றியே தவிர, தனிக் கட்சிகளுக்கு ஆட்சி அமைக்கக் கிடைத்த வெற்றி அல்ல.

கடந்த ஆட்சியில் இருந்த எதிர்க்கட்சிகள் மீதும், ஆளும் கட்சியான பா.ச.க. மீதும் மக்களுக்கு முழுமையான நம்பிக்கை ஏற்படவில்லை என்பதையே இத்தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன. அதன் வெளிப்பாடுதான் எந்தக் கட்சிக்கும் தனித்த பெரும்பான்மை இல்லை என்பது.

மக்களின் இந்தத் தீர்ப்பு இரு கட்சிகளுக்குமே பாடம் கற்றுக் கொடுக்கிறது. அரசியல் தலைவர்களைவிட மக்கள் எப்போதுமே புத்திசாலிகள்தான் என்பதை இம்முடிவுகள் மற்றொரு முறை எண்பித்திருக்கின்றன. மோடி மதவாத அரசியலைத் தவிர்த்து மக்கள் நல அரசியலைக் கொண்டிருக்க வேண்டுமெனவும், மக்கள் நலத்திட்டங்களில் அதிகக் கவனம் கொண்டிருக்க வேண்டுமெனவும் மோடி அரசுக்கு, இல்லை ஒன்றியக் கூட்டணி அரசுக்கு மக்கள் அறிவுறுத்தியுள்ளனர். சனநாயக  மரபுகளும், மாண்புகளும் காக்கப்பட வேண்டும் என உரக்கச் சொல்லியிருக்கின்றனர்.

இருதரப்பினரும் பாடம் கற்றுக்கொள்ளும் தீர்ப்பை மக்கள் வழங்கியுள்ளது பாராட்டத்தக்கதே! ஒவ்வொரு கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், வேட்பாளர்களின் அறமற்ற செயல்பாடுகளை மக்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அத்தகைய அளவுகோலின் விளைவே இந்தத் தேர்தல் முடிவுகளும், தொங்கும் ஆட்சியும். 

பா.ச.க. அரியணையில் அமர்ந்தாலும், புதிய அமைச்சரவையில் இந்த அரசு பெரும் மாற்றங்களை முன்னெடுக்கவில்லை. கடந்த ஆட்சியில் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்களே பெரும்பாலும் அதே பொறுப்புகளில் தொடர்வதாகத் தெரிகிறது. மூத்த அமைச்சர்கள் பலருடைய துறைகள் மாற்றமில்லாமல் தொடர்வதன் மூலம் முந்தைய ஆட்சியின் நீட்சியாகத்தான் இது இருக்குமோ என்றே பலரும் கருதுகின்றனர். 

ஆயினும், நாமொன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். முகம் ஒன்றுதான்; ஆனால், முகவரி வேறு! இவர்கள் பா.ச.க. அமைச்சர்கள்; அதனால் தேசிய சனநாயகக் கட்சியின் முகவரி கொண்டவர்கள். ஆள் ஒன்றுதான், வால் வேறு. கிராமச் சொல்லாடல்போல இவர்களால் ‘வெறுமனே வாலாட்ட முடியாது.’ மக்கள் அல்ல, கூட்டணிக் கட்சிகளே வாலை நறுக்கி விடுவார்கள். ஆகவே, கூட்டணிக் கட்சி அமைந்தாலும், மாற்றமின்றித் தொடரும் சில துறை(ரை)களால் மோடியின் முந்தைய ஈரைந்து ஆட்சிக் காலம் போலவே இருக்கும் என்று நினைக்கத் தேவையில்லை. இருப்பது அதே நபராக இருந்தாலும், இயக்குநர்(கள்) வேறு நபர்கள் அல்லவா!

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, இராணுவம், பாதுகாப்பு, வர்த்தகம் போன்ற துறைகளில் இந்தியாவின் செயல்பாடுகளும், அணுகுமுறையும் முன்புபோலத் தொடர்ந்தாலும், மக்கள் பிரச்சினைகள், அடிப்படை உரிமைகள், மாநில உரிமைகள், சிறுபான்மையினர் நிலைப்பாடு போன்றவற்றில் உறுதியாக மாற்றமிருக்கும்.

குறிப்பாக, மாநில உரிமை, சிறுபான்மையினருக்கு எதிரான கொள்கை முடிவுகளும், திட்டங்களும் கூட்டணிக் கட்சிகளின் நிர்ப்பந்தம் காரணமாகவும், தனிப் பெரும்பான்மை இல்லாத காரணத்தாலும் கைவிடப்படும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கணிப்பு. ஆனாலும் இந்த ஆட்சிக்கு முட்டுக்கொடுக்கும் சந்திரபாபு, நிதிஷ், ஷிண்டே போன்றோர் ஒன்றும் கொள்கைக் கோமான்கள் அல்லர். வேண்டியதை வீசியெறிந்தால் நவ துவாரங்களையும் மூடிக்கொள்வர். அவர்களின் கடந்த கால அரசியல் தகிடுதத்தங்கள் அப்படி!

ஆனாலும், இனி ஒரே நாடு, ஒரே தேர்தல், பொதுச்சிவில் சட்டம், அக்னிவீர் திட்டம், தொகுதி மறுசீரமைப்பு, அயோத்தியைப் போலவே காசி-மதுராவில் கோவில்கள் கட்டுவது போன்றவை இனி நிறைவேறும் சாத்தியம் கிடப்பில் போடப்படலாம். ஏனெனில், ஆந்திராவில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெருமளவில் பெற்றுள்ள சந்திரபாபு, தனது சுய இலாபங்களுக்காக அதைக் காவு கொடுக்கத் துணியமாட்டார்.

ஒன்றிய அமைச்சரின் முதல் கையொப்பமே ‘நிதி மேலாண்மையில்’ இனி புதிய அணுகுமுறை இருக்கும் என்பதையே காட்டுகிறது. எனவே, இனி கத்திமேல் பயணம் போன்றே மோடியின் அடுத்தடுத்த நகர்வுகள் இருக்கும்.

கூட்டணிக் கட்சிகளின் நிர்ப்பந்தமும், எதிர்க் கட்சிகளின் எதிர்ப்புக் குரலும் ஒலிக்கும் முன்பே ஆர்.எஸ்.எஸ்.-சிடமிருந்து அபாயச் சங்கு ஒலிக்கத் தொடங்கிவிட்டது. “தேர்தலின்போது போட்டி தவிர்க்க முடியாதது;  ஆனால், அது நேர்மையாகவும், கண்ணியமாகவும் இருக்க வேண்டும்; உண்மையான சேவகர் கண்ணியத்தைக் கடைப்பிடிப்பார்; ஆணவத்தைக் காட்டி மற்றவர்களைக் காயப்படுத்தமாட்டார்; தேர்தல் வாய்ச் சவடால்களை விட்டுவிட்டு, நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது; மணிப்பூர் இன்னும் எரிந்து கொண்டுதான் இருக்கிறது; அதை யார் கவனிக்கப் போகிறார்கள்?” என்று கேள்வி எழுப்புகிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத். தேர்தலில் வாங்கிய அடி அவரை இப்படிப் பேச வைத்திருக்கிறது. அவர் மீதும், அவருடைய நீண்ட நாள் அமைதியின் மீதும் நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், அவர் கூறிய இந்தக் கூற்றில் ஓராயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருக்கின்றன. தோல்வியின் விளிம்பு வரை சென்றுவிட்ட அவரது ‘சேவகர்கள்’ சுயவிமர்சனம் செய்துகொள்ளவே இந்தப் பேருண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.

“இந்தியா கூட்டணிக்கு மக்கள் கணிசமான தொகுதிகளில் வெற்றியைத் தந்தாலும், ஆட்சியமைக்கக் கூடிய வெற்றி கிடைக்கவில்லை. இதை ‘இந்தியா’ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எச்சரிக்கையாகவும், அறிவுரையாகவும் கருத வேண்டும். ‘இந்தியா’ கூட்டணி இன்னும் வலுப்பெற வேண்டும். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் பக்குவத்தைப் பெற வேண்டும். எதிர்காலத்தில் 28 கட்சிகள் ஒன்றுசேர்ந்து ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டால், மக்களுக்கு நிலையான ஆட்சியைத் தரும் நல்லிணக்கத்தையும் பெற வேண்டும். பா.ச.க. அரசு நிலையான அரசாக அமையாவிட்டால் நாட்டு மக்களைக் காப்பாற்ற ‘இந்தியா’ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என்கிறார் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன். எதிர்க்கட்சிகள் தயார் நிலையில் இருக்க அழைப்பு விடுக்கிறார்.

இந்திய சனநாயக ஆட்சி அமைப்பில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் என்பது சாத்தியமாகிறது. பல வேளைகளில் அது அவசியமானதாகவும் இருக்கிறது. மக்கள் தண்டிப்பார்கள்; ஆட்சி பறிபோகும் என்ற எண்ணம் எழும்போது அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் தவறு செய்யத் தயங்குவார்கள்; எச்சரிக்கையுடன் இருப்பார்கள். இந்துத்துவத்தில் பா.ச.க. தண்டிக்கப்படவும், காங்கிரஸ் ஆட்சி அமைக்கவும் வாய்ப்பிருந்தும் சாத்தியப்படவில்லை. ஆட்சி மாற்றம் இந்திய மண்ணில் பல மாற்றங்களைக் கொடுக்கும் எனக் காத்திருந்த சூழலில், இன்னும் அது சாத்தியப்படும் என்று எங்கோ ஒரு மூலையிலிருந்து வரும் நம்பிக்கைக் குரலொலி எமக்கும் ஆறுதல் தருகிறது.

அன்புத் தோழமையில்,

முதன்மை ஆசிரியர்

Comment