No icon

கண்ணீரில் மிதக்கும் கள்ளக்குறிச்சி!

 ‘உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்

கள்ளொற்றிக் கண்சாய் பவர்’ (குறள்: 927)

கள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவரைப் பற்றிய செய்திகள் உள்ளூரில் வாழ்பவர்களால் அறியப்பட்டு எந்நாளும் இகழ்ந்து எள்ளி நகையாடப்படுவார் என்கிறார்கள்ளுண்ணாமைஅதிகாரத்தில் ஐயன் வள்ளுவர்.

மதுவினால் பாழாக்கப்பட்ட பேரறிவாளர்களைச் சிந்தியுங்கள்... கற்பனை உலகில் உலவவிட்டுப் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பித்தர்களாகவும், வெறியர்களாகவும் மாறச் செய்யும் மது என்னும் தீயப் பொருளைப் பற்றிச் சிந்தியுங்கள்... குடியால் ஏற்படும் தற்கொலைகள், மூளைக் கோளாறுகள் மற்றும் பாதிப்புகளை எண்ணிப் பாருங்கள்... மரண ஆற்றில் இரு கரைகளையும் நிறைத்திருக்கும் சிதைவுச் சின்னங்களை நெஞ்சில் நிறுத்துங்கள்... தெளிந்து சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் இழி  பொருளாகிய மதுவை முற்றிலுமாக வெறுத்து ஒதுக்கிடுவான்!’ என்கிறார் இங்கர்சால்.

வள்ளுவரும் இங்கர்சாலும் கொடுத்த எச்சரிக்கை பலருக்குக் காலம் கடந்து காலாவதியான மாத்திரை போலும்! அது அறநெறி வாழ்வுக்கான எச்சரிக்கை மணி என்பதை மறந்து விட்டார்கள். இந்த எச்சரிக்கை அறியாது நிகழ்ந்ததுதான் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய நிகழ்வு. இக்கொடிய நிகழ்வு உலகிற்கு உணர்த்தும் செய்திகள் ஆயிரமாயிரம்.

அரசின் வருவாயை அதிகரிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் மதுக்கடைகள்டாஸ்மாக்திறந்து கிடப்பது காலத்தின் கோலம்; இது அரசின் அவலம்! இங்கே... கள்ளுண்ணாமை குறித்து வள்ளுவன் வலியுறுத்தியதும், மதுவிலக்குக்காக மகாத்மா கொடி பிடித்ததும் அர்த்தமற்றுப் போய்விட்டன. ‘காசேதான் கடவுளப்பா; அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமப்பா!’ என்ற கூற்று உள்ளத்தின் ஆழத்தில் ஊன்றிப்போனதால், காசு, பணம், துட்டு எனத் தொடர்கிறது ஆட்சியாளர்களின் தேடல். மதுக்கடை வருமானமே இலவசத்தின் திறவுகோலாகிப் போனது. மதுவிலக்கு மலர்ந்துவிட்டால், இலவசம் இல்லாமல் போகிவிடும் என்கிறார்கள். யார் கேட்டது இலவசம்? மதுவை - டாஸ்மாக் கடைகளை முதலீடாக வைத்து இலவசத்திற்கான பல கோடிகளைத் திரட்டுகிறது அரசு. மக்களை மாக்களாக்குவது இந்த அரசே! ‘கள்ளுக்கடை காசுலதாண்டா கட்சிக் கொடி ஏறுது போடா...’ என்று ஒலிப்பெருக்கியில் அன்று கேட்ட வரிகள் பல வேளைகளில் இன்று உண்மையாகிப் போகிறது.

மதுசொர்க்கலோகத் திரவம்என்றும், கற்பனை உலகுக்கானமந்திரச் சாவிஎன்றும் வாழ்த்தி வணங்கி வரவேற்கும் கூட்டம் ஒன்று இங்கே மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறது. போதை தரும் பாதையில் சமுதாயத்தின் பண்பாட்டுச் சீரழிவு, அரசாங்க அங்கீகாரத்துடன் நடந்து கொண்டிருக்கிறது என்பதே வேதனையளிக்கிறது. “ஒழுக்கமும் நேர்மையும் மக்களிடம் பழுதுபடாமல் பார்த்துக் கொள்வதே ஒரு நல்லரசின் நோக்கமாக இருக்க வேண்டும்!” என்கிறார் கன்பூசியஸ். மதுவினால் உண்டாகும் தனிமனித குடும்ப - சமூகச் சீரழிவை அறியாமலா இருக்கிறது இந்த அரசு? ‘குடி நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடுஎன்று அறிந்தே அல்லவா கல்லாக் கட்டுகிறது. உடலைப் பாழாக்கி, குடும்பத்தை வறுமைத் தீயிலிட்டு, சமூகத்தையே சீரழிக்கும் மதுவை அகற்றிட வேண்டாமா? சாவும், நோவும் நீக்கி மக்கள் வளமாக வாழ்ந்திட வழிகாட்ட வேண்டாமா இந்த அரசு? அரசின் மதுபானக் கொள்கை மாபெரும் குற்றச் செயலே!

ஆகவேதான், ‘குடிபோதை குற்றங்களைத் தூண்டுகிறதுகுடியின் மூலம் வரும் வருவாய்பாவத்தின் கூலி (wages of sin)’ என்கிறார் இந்திய தேசிய காங்கிரசை உருவாக்கிய ஆலன் ஆக்டேவியன் ஹியூம்மேலும் அவர், ‘அரசுக்கு இதில் ஒரு ரூபாய் வருவாயாக வந்தால், இதனால் எழும் குற்றங்களைத் தடுக்க இரண்டு ரூபாய் செலவழிக்க நேரிடும்என்கிறார். அவர் தீர்க்கதரிசியே! கள்ளக்குறிச்சி நிகழ்வு காட்டும் பேருண்மையும் அதுவே!

இந்நிகழ்வால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தாயுள்ளத்தோடு தமிழ்நாடு அரசு உதவிக்கரம் நீட்டினாலும், இக்கொடிய நிகழ்வுகளும், கொடுமைகளும் இனி எவருடைய வாழ்விலும் நிகழாத வண்ணம் அரசு கள்ளச்சாராயத்தை அறவே ஒழிப்பதற்கு மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதோடு, முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது எங்கும் எதிரொலிக்கும் மக்கள் குரல். கள்ளச்சாராயத்தை ஒழித்து விட்டு நல்ல சாராயத்தை டாஸ்மாக்கில் விற்பதல்ல இராஜதந்திரம்!

59 நபர்களின் உயிரைப் பறித்த இந்நிகழ்வில் வழக்கை சி.பி.சி. .டி.க்கு மாற்றியும், அதிகாரிகளை உடனே நீக்கியும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தும் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், கால் நூற்றாண்டாக அப்பகுதியில் தொடரும் இந்த அவலத்தை அரசு முன்கூட்டியே தடுத்து நிறுத்தியிருக்கலாமே என்பதே பலருடைய ஆதங்கமாக இருக்கிறது. மேலும், “கள்ளச்சாராயம் குடித்து 59 ஏழைத் தொழிலாளர்கள் உயிரிழந்த பேரவலம் நாட்டைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதுதான் இந்தக் கொடுமையைத் தடுக்கும் நிரந்தரத் தீர்வாக அமையும். மதுவிலக்கின் தேவை குறித்து மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் இன்றியமையாததுஎன்று குறிப்பிட்டிருக்கிறார் திரு. தொல். திருமாவளவன்

இவ்வேளையில், தேசிய மனித உரிமை ஆணையம் கள்ளக் குறிச்சி - கருணாபுரம், மாதவச்சேரி பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 59 நபர்கள், சிகிச்சை பெறும் 200-க்கும் மேற்பட்டவர்கள் குறித்த விவரம், பதிவு செய்யப்பட்ட வழக்கின் நிலவரம், பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை, உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகியவை குறித்த விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலருக்கும், காவல்துறை டி.ஜி.பி.க்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

அதிர்ச்சியிலும், சோகத்திலும் அனைவரையும் ஆட்கொண்டு நாட்டையே உலுக்கியுள்ள இந்நிகழ்வால் தமிழ்நாடு வெட்கித் தலைகுனிந்து நிற்கிறது. ‘தமிழன் உணவுக்கும், மருந்துக்கும் செலவழிப்பதைவிட, சாவதற்கு வழிகாட்டும் சாராயத்துக்குத்தான் அதிகமாகச் செலவழிக்கிறான்என்ற விமர்சனம் நமக்கு அவமானத்தின் உச்சமாக இருக்கிறது. ஒவ்வொரு திருவிழாக் காலங்களிலும் முந்தைய ஆண்டைவிட பல ஆயிரம் கோடிகளில் டாஸ்மாக் வருமானம் எகிறிக்கொண்டே போவதுதானே சாதனையாக இங்கே இருக்கிறது. சாப்பாட்டுக்குத் தட்டுப்பாடு வந்தாலும், சாராயத்துக்குத் தட்டுப்பாடு வரக்கூடாது என்பதில் அரசு தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. அவலம்.... இது பேரவலம்...!

ஆகவே, மதுவின் வாசனை அறியாத ஒரு புதிய தலைமுறையை உருவாக்க வேண்டியது நமது கடமை. முழு மதுவிலக்கு வரும் வரை மதுவுக்கு எதிரான, வலிமையான குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். சமூக அவலங்கள் நிகழும்போது விழி இருந்தும் பாராமல், செவி இருந்தும் கேளாமல், வாய் இருந்தும் பேசாமல் இருந்தால் நாம் வீணர்கள். கள்ளச்சாராயம், டாஸ்மாக், போதைப்பொருள் விற்பனை இச்செயல்பாடுகளில் அரசு தீர்க்கமான முடிவெடுக்க வலியுறுத்துவோம். போதை காட்டும் பாதை அறிந்து மக்கள் விலகி நிற்க வழிகாட்டுவோம். மதுவால் ஏற்படும் மரணங்களுக்குக் கள்ளக்குறிச்சி கண்ணீர் முற்றுப்புள்ளியாகட்டும்.

அன்புத் தோழமையில்,

முதன்மை ஆசிரியர்

 

Comment