No icon

இளையோரே, எது வேண்டும்? உங்களின் பங்களிப்பா? பிரதிநிதித்துவமா?

உலக வரலாற்றுப் பக்கங்களில் மகத்தான விடுதலைப் போராட்டங்களை, மாற்றத்திற்கான முன்னெடுப்புகளை, அரசியல் மாற்றங்களை முன்னெடுத்திருப்பவர்கள் இளையோர் என்பதை எவரும் மறுக்க இயலாது. அதிகார ஆதிக்கம், அடக்குமுறை, ஊழல், நிற-இன பாகுபாடு என, சமூக அநீதிகளுக்கு எதிரான அவர்களின் பங்களிப்பையும் மறந்துவிட முடியாது. பல சூழல்களில் வெற்றி என்பது உடனே கைகூடாமல் போயிருந்தாலும், புது உலகின் கனவுக்கான விடியலின் வித்தாக அம்முயற்சிகள் இருந்திருக்கின்றன. இளையோர் அத்தகைய ஆற்றல் கொண்டவர்கள்!

தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16, 2024 அன்று முடியவிருக்கும் சூழலில், இன்னும் சில மாதங்களில் நாட்டின் பதினெட்டாவது மக்களவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் காலங்களில் எப்போதும் இளையோர் பேசுபொருளாக்கப்படுவர். தற்போதும் அவர்கள் அதற்கு விதிவிலக்கல்லர்.

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ள 96,88,21,926 அதாவது ஏறக்குறைய 97 கோடி நபர்களில், 2.63 கோடி நபர்கள் புதிய வாக்காளர்கள். ஒவ்வொரு தேர்தலின் போதும் குறிப்பிடத்தக்க அளவு இளையோர் அதிலும் குறிப்பாக, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், அவர்களிடையே காணப்படும் வாக்களிப்பின் மீதான ஆர்வத்தாலும் அவர்கள் அரசியல் களத்தில் கவனம் பெறுகிறார்கள்; கணிக்கப்படுகிறார்கள்; பாவம், பல வேளைகளில் களவாடப்படுகிறார்கள்.

இன்றைய இளையோரை இரு பிரிவுகளாகப் பார்க்கிறேன். ஒன்று, குறைவான அரசியல் தெளிவுடனும், பெரும் நம்பிக்கையுடனும் அரசியலை ஆதாயத் தளமாக ஆரத்தழுவும் கூட்டம்; மற்றொன்று, நிறைவான தெளிந்த அரசியல் சிந்தனையுடன், ஆனால், சனநாயக மற்றும் தேர்தல் கட்டமைப்பின் மீது நம்பிக்கை இழந்த கற்றறிந்த இளையோர் கூட்டம்.

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா தம்பி...’ என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளைச் சற்றே இந்த முதல் கூட்டம் அசைபோட்டுப் பார்க்க வேண்டும். கண்களை மூடிக்கொண்டு ஆளுமைத் துதிபாடி (Hero Worship) தலைவர்களைத் தெய்வமாக்கும் கூட்டம் பெருகி வருவது கவலைக்கிடமாக உள்ளது. இவர்களின் இளமையும், வேகமும், துடிப்பும், ஈடுபாடும், உற்சாகமும் களவாடப்படுகிறதே என்றே ஆதங்கப்பட வேண்டியிருக்கிறது. நேரிய ஆக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய இளையோரின் ஆற்றல் மடைமாற்றம் செய்யப்பட்டு, அர்த்தமற்றுப் போகிறதே என்றே கவலைகொள்ள வைக்கிறது. அந்தோ பாவம், இவர்கள் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள்.

பொய்மையின் பிடியில் சிக்கியிருக்கும் நாட்டைக் கண்ட கற்றறிந்த இளையோர் சற்றே தூரம் ஒதுங்கி நிற்கின்ற அவலமும் தெரிகிறது. ‘நமக்கு ஏன் இந்த வம்பு?’ என்பதும், ‘இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?’ என்பதும், அன்றாட உரையாடலில் வரும் எதார்த்தமான சிந்தனையாகி விட்டன. இப்படி நம்பிக்கை வறண்டு போனவர்களின் கைகளில் நாடு எப்படிப் பாதுகாப்பாக இருக்க முடியும்? என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது. நம்பிக்கைத் துடுப்புகளால் வாழ்க்கைப் படகை வழிநடத்தினால்தானே நாம் அடைய விரும்பும் கரை கண்களுக்குத் தென்படும்.

அறிவுத் தெளிவைக் கலங்கவிடாதே!’ என்றார் பாரதி. ‘மாற்றம்என்ற இலட்சியம் இவர்களிடத்தில் கூர்மையாக்கப்பட வேண்டும். இளையோர் அதில் தெளிவு கொள்ள வேண்டும். அந்த இலட்சியத்தை அடைய சரியான பாதை, எண்ணங்களில் உறுதி, தீவிர முயற்சி, நேர்வழி நடப்பு, தன்னம்பிக்கை! இவற்றைத் தளர விடாமல் செயலில் காட்ட வேண்டும். பாதையை நாம் தேர்ந்து தெளிவாக்கிக் கொண்டால் போதும், மற்றைய மதிப்பீடுகள் நம்மை அணிசெய்து அலங்கரிக்கும்.

அதேவேளையில், பணமும் பதவியும் தனிமனித சுய வளர்ச்சியை நிர்ணயிக்கும் இன்றைய சூழலில், அதிகாரம் மட்டுமே சமூக வளர்ச்சியை நிர்ணயிக்கும் அளவுகோலாகிப் போனது. அதிகாரம் இன்றி, அணுவும் அசை யாது இன்று. ஆகவே, இளையோர் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். அதற்கு இளையோர் அரசியல் அறிவில் தெளிவுபெற வேண்டும்; அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும்; அடிப்படை அரசியல் ஆர்வத்தோடு புரிதலும் இருக்க வேண்டும்.

மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க அவர்களே வழிதேட முனைய வேண்டும். அவர்களுக்கு உண்மை புரிந்துவிட்டால், தங்களுடைய வழியைத் தாமே கண்டுகொள்வார்கள். அவர்களுக்கு உண்மையைப் புரிய வைப்பதுதான் நம் வேலைஎன்றார் சோவியத் இரஷ்யாவின் எழுத்தாளரும், அரசியல் சிந்தனையாளருமான மாக்ஸிம் கார்க்கி. இது இன்றைய இளையோருக்கு முற்றிலும் பொருந்தும். இளையோர் தங்கள் விடியலுக்கான வழியைத் தேட முன்வர வேண்டும். உண்மை நிலையை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, அதைப் புரிய வைப்பதே இன்றைய தேவையாக, நமது வேலையாக இருக்கிறது.

இந்திய விடுதலை வரலாற்றில் பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் எனும் இளைஞர்கள் தூக்கிலிடப்பட்டனர். இவர்கள் தியாகத்தால் தாய் மண்ணைத் தம் இரத்தத்தால் புனிதப்படுத்தியவர்கள். உரமாகி வளர்த்த விடுதலை மரத்தில் பழுத்துக் குலுங்கும் உரிமைக் கனிகளை இன்று சுவைப்பவர்கள் யார்? என்ற கேள்வியும் விடைதேட வைக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 35% இளையோர். இருந்தபோதும் அரசியல் ஈடுபாடும், வாக்களிக்கும் ஆர்வமும் அண்மைக்காலங்களில் குறைந்து வருவதும் எதார்த்த நிலை. ‘இன்றைய இளைஞர்கள் ஊழல் அரசியலுக்கு எதிரானவர்கள்; இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உண்டுஎன்றார் அண்மையில் ஒன்றிய முதன்மை அமைச்சர்.

ஆனால், இளையோரின் இத்தகைய மனநிலைக்கு என்ன காரணங்கள் என்பதையும் அறிய வேண்டும். தேர்தல் நேரங்களில் மட்டும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்படும் இவர்கள், பின்புகறிவேப்பிலையாகத்தூக்கியெறியப்படுகிறார்கள். முழுமையான பங்களிப்பு தரும் இவர்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை என்பதும் உண்மையே. மற்றொருபுறம், அரசியல் பின்புலம் இல்லாமை, பொருளாதாரப் பலமற்றிருப்பது போன்ற காரணங்களால், பல கட்சிகள் இவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்குவதில்லை. காரணம், ‘கோடிகள்என்பதே தகுதியாகவும், எப்படியும் வெற்றி அடைவது என்பதே இலக்காகவும் இருப்பதால், பல கட்சிகளில்வாய்ப்புஎன்பதே எட்டாக் கனியாக உள்ளது. தங்களுக்குரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்கிற சலிப்பும் அவர்களால் தேர்தல் பங்களிப்பைப் புறந்தள்ளச் செய்கிறது.

ஆயினும், “இளையோரே, எழுந்திருங்கள்; விழித்திருங்கள். இனியும் தூக்கத்தைத் தொடர வேண்டாம். எல்லாத் தேவைகளையும், எல்லாத் துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருக்குள்ளேயும் இருக்கிறதுஎன்ற சுவாமி விவேகானந்தரின் கூற்றை நினைவில் கொள்ளுங்கள். சோதனைகள், வேதனைகள் இல்லாமல் வெற்றியோ, சாதனையோ பிறப்பதில்லை. பல சாதனையாளர்களின் வெற்றியை வரலாறு நமக்கு முன்வைக்கிறது. இலக்கை நோக்கித் தொடர்ந்து பயணிப்போம். ஐயமென்று ஒருபோதும் நின்று விட வேண்டாம். ‘இயலாதுஎன்று உலகில் எதுவுமில்லை; முயன்றால் எதிலும் வெற்றி காணலாம்.

வலிமையான எண்ணம் உங்களைச் செயல்வீரராக உயர்த்தி விடும்என்றார் அப்துல்கலாம். தனிமனிதப் பொருளாதார ஏற்றம் கொண்ட, எல்லாருக்கும் எல்லாமும் உண்டு என்ற பொதுவுடைமைச் சமத்துவ நிலைக்கான, சமூக-அரசியல் மாற்றத்தை மனத்தில் நிறுத்தி இளையோர்கள் அரசியல் செயல்பாடுகளில் முழுமையான அர்ப்பணத்துடன் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இளையோர் அரியணை அமரும்புதிய இந்தியாவை’, அதாவது, ‘இளையோர் இந்தியாவைகாலம் ஒரு நாள் காட்டும். அது விரைவில் நடக்கும் என்பதே எமது நம்பிக்கை!

அன்புத் தோழமையில்,

அருள்பணி. செ. இராஜசேகரன்

Comment