No icon

மக்களாட்சியை (சனநாயகத்தை) மீட்டெடுப்போம்!

இந்தியத் தாய்சனநாயகம்எனும் ஆடை உடுத்தி, மாண்புடன் வாழத் தொடங்கி 76 ஆண்டுகள் கடந்த நிலையில், பாசிசம், வெறுப்பு அரசியல், பிரிவினை எண்ணம், பதவி மோகம், அதிகார ஆணவம், ஊழல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது, விமர்சனங்களைத் தாங்கும் சகிப்புத் தன்மையின்மை, தனிமனித புகழ்ச்சி, கட்சித் தாவல் போன்ற கொடிய நோய்களின் பாதிப்புகளால் இன்று இந்தியத் தாய் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கிறாள். இந்த உயிர்க்கொல்லி நோயிலிருந்து இந்திய சனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டியது நமது ஒவ்வொருவருடைய கடமை என்ற போதிலும், உயிர் பிழைக்கச் சற்றே நம்பிக்கைக் கொண்டுள்ள இந்தியத் தாய், தனது உதவிக் கரங்களாய் உடன் வருவோர் யார்? என்றே எதிர்நோக்கிக் காத்திருக்கிறாள்.

மக்களால், மக்களுக்காக ஏற்படுத்தப்படும் மக்களுடைய அரசே மக்களாட்சிஎன்ற ஆபிரகாம் லிங்கனின் கூற்று, இந்திய மண்ணில் சிதைந்து கொண்டிருக்கிறதோ என்றே எண்ணத் தோன்றுகிறது. நம் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரைஇறையாண்மை மிக்க சமதர்ம, சமயச் சார்பற்ற மக்களாட்சிக் குடியரசை அமைத்திட இந்தியர்களாகிய நாம் உறுதிபூண்டிருக்கிறோம்என்றே வரையறுக்கிறது. இங்கேஇறையாண்மை மிகுந்திருத்தல்’, ‘சமதர்மம் கொண்டிருத்தல்’, ‘சமயச் சார்பற்றிருத்தல்’, ‘குடிமக்களால் ஆன மக்களாட்சி கொண்டிருத்தல்என்ற அதன் நான்கு கூறுகளும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவை. இவை நான்குமே இன்று சிதைக்கப்படுவதுதான் வேதனையிலும் வேதனை!

இன்றைய ஒன்றிய பா... அரசின் மனுதர்மத்தால், சமதர்மம் கொலையுண்டது; ‘இந்துமுழக்கத்தால் சமயச் சார்பற்ற தன்மை அழிக்கப்படுகிறது; வாக்கு இயந்திரங்களால் மக்களாட்சி என்ற கனவும் கலைக்கப்படுகிறது. நாம் நம்பிக்கையோடு இருந்தது அரசியலமைப்புச் சட்டத்தின்இறையாண்மைமீதுதான்; அதுவும் இன்று கேள்விக்குறியாகிவிட்டது.

அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு (திருத்துவதற்கு அல்ல), பா... 400 இடங்களுக்குமேல் வெற்றிபெற வேண்டும்என்ற அக்கட்சியின் கர்நாடக மக்களவை உறுப்பினர் அனந்த்குமார் ஹெக்டேவின் கருத்து, கடும் கண்டனத்திற்குரியது. அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதன் உள் நோக்கமேஇந்து மதத்தைக் காப்பாற்ற வேண்டும்என்பதுதான். இது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பா... 400 மக்களவைத் தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற்று விட்டால் அது சாத்தியமாகும் என்ற நம்பிக்கையை அவருக்கும், அவர்களுக்கும் கொடுத்தது எது? பசுத்தோல் போர்த்தி, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் நயவஞ்சகர்களின் சூழ்ச்சி சுழன்று கொண்டே வருகிறது. இது எப்பெரும் ஆபத்தைத் தருமோ என்றே மக்கள் அச்சத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.

அனந்த் குமார் ஹெக்டேவின் கூற்றுக்கு நாடெங்கும் கடும் கண்டனம் எழுந்துள்ள இச்சூழலில், “பா... எம்.பி-யின் கருத்தானது சர்வாதிகாரத்தைத் திணிக்கும் மோடி-ஆர்.எஸ்.எஸ். கூட்டணியின் வஞ்சகமான திட்டத்தை மீண்டும் அம்பலப்படுத்துகிறதுஎன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயும், “இக்கருத்து பிரதமர் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சினுடைய மறைமுக நோக்கங்களின் பொது அறிவிப்பு; அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தை அழிப்பதே இவர்களின் இலக்குஎன்று இராகுல் காந்தியும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

நாட்டில் சர்வாதிகாரத்தைத் திணிப்பதும், இந்திய மக்கள்மீதுமனுவாதி மனநிலையைத்திணிப்பதும், பட்டியலின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மைச் சமூக மக்களின் உரிமைகளைப் பறிப்பதையுமே பா... நோக்கமாகக் கொண்டிருக்கிறது. நீதி, நேர்மை, சமத்துவம், சகோதரத்துவம், பொது உரிமை, சனநாயகம் போன்றவை இவர்களுக்குக் கசப்பான கனிகளாகவே தென்படுகின்றன. இந்து, இந்து இராஜ்யம், ஹிந்தி, சமஸ்கிருதம் இவைகள்தாம் இவர்களுக்கு இன்று இனிக்கின்றன. பா...விற்கு இனிப்பானது எல்லாருக்கும் தேனாக வேண்டும் என்பதில் என்ன நியாயமிருக்கிறது?

மக்களாட்சி அமைப்பு முறையில், அதன் பல்நோக்கு வளர்நிலையைத் தாங்கிப் பிடிக்கும் தூண்களான நீதித்துறை, நிர்வாகத் துறை, பாராளுமன்றங்கள், சட்டமன்றங்கள் மற்றும் ஊடகத்துறை ஆகிய நான்கும் ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்தால் இன்று ஆட்டிப் படைக்கப்படுகின்றன. உன்னதமான மாண்பில், மக்கள் நலனில் அடித்தள மிடப்பட்டிருந்த இந்த அடித்தளங்கள் இன்று தகர்க்கப்படுகின்றன. ஊடகங்களை அடிமைப்படுத்துவதன் மூலம், தனிமனிதக் கருத்துச் சுதந்திரத்தின் குரல் வளை நெரிக்கப்படுகிறது. இத்தகைய சூழலில், தேர்தலில்அறம்காக்கப்படுமா? என்பது பெரும் கேள்விக் குறியே! தேர்தல் நடத்தப்படும்; ஆனால், அது போலித்தேர்தலாக மட்டுமே இருக்கும் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். போலிகளால் கட்டமைக்கப்பட்டு, ஊடக வெளிச்சத்தில் உலா வரும் இவர்களால் எதுவும் சாத்தியமே. இதில் வியப்புக்கொன்றுமில்லை.

விடுதலை கிடைத்தும் அது சிறந்த அரசையும், நிறைந்த மகிழ்ச்சியையும் உடனே மக்களுக்குத் தந்துவிடாது; தேர்தல் ஒழுங்கீனம், ஊழல், அநீதி, பண பலத்தின் கொடுங்கோன்மை, நிர்வாகத் திறமையின்மை ஆகியவை மூலம் மக்கள் வாழ்க்கை நரகமாகும். முன்பிருந்த ஆங்கிலேயர் ஆட்சியே மேலானது என்று மக்கள் நினைக்கும் நிலை வரும்...” என்று 1922-இல் வேலூர் சிறை வாசத்தில் இராஜாஜி அன்று எழுதி வைத்துள்ள சிறைக்குறிப்பு இன்று சரியாகப் பொருள்படுகிறது. அவர் அன்றே தீர்க்கமாகக் கணித்திருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

தேர்தல்கள் நடத்தப்படுவதாலேயே சனநாயக ஆட்சி தொடர்வதாக நாம் எண்ணினால், அது நமது மடமையே. சமூக, பொருளாதார, ஏற்றத்தாழ்வுகள் இன்றும் நீடிக்கும் நிலையில், சனநாயக நடைமுறைகள் முறையாகப் பேணப்படவில்லை என்பதை நாம் உணர வேண்டும். சனநாயகத்தின் குறைந்தபட்ச அடையாளமாக இருக்கும் தேர்தல் நடைமுறைகள்கூட இன்று முற்றிலும் சீரழிந்துவிட்டன. பணம் ஆளப்படுகிறது; பதவி தேடப்படுகிறது; பொய்மை உண்மையாக்கப்படுகிறது; வாக்குறுதிகள் உளறலாகிறது; கண்ணியம் களவாடப்படுகிறது; எளிமை ஏளனமாகப் பார்க்கப்படுகிறது; நேர்மை வியப்பாக விசாரிக்கப்படுகிறது... மொத்தத்தில் தேர்தலின் மகத்துவமே பறிபோய் நிற்கிறது!

கறுப்புப் பணம்தான் வெற்றியைக் களவாடுகிறது என்றால், மாண்பும், மதிப்பீடும் கொண்ட சனநாயகத் தேவதையின் தலை வெட்டப்படும் களமாகத் தேர்தல் மாறிவிட்டது கண்டு இளைய தலைமுறையானது இன்றே வீறுகொண்டு எழ வேண்டும்.

அரசியல் - தேர்தல் - ஆட்சி அமைப்பு முறை இவற்றின் தன்மையும், செயல்பாடுகளும் இன்று பா... அரசால் மாறிப்போனதில் எவருக்கும் வியப்பொன்றுமில்லை. வேள்வியாக இருந்த அரசியல் இன்று பலருக்கு முதலீடு இல்லாத தொழிலாகிப் போனது. தேர்தல் ஆணையம் எனும் தன்னாட்சி அமைப்பு, ஆளும் வர்க்கத்திற்குள் அடங்கிப் போனது. ஆட்சி அமைப்பு முறையில்பணியிடம்பதவியாகப் பார்க்கப்பட்டு பன்முக ஆளுமையற்ற, நிர்வாகத் திறமையற்ற, மக்கள் செல்வாக்கு அற்ற தனிநபர் தலைமையே கொண்டாடப்படுகிறது.

இன்று பேராபத்து அணை கடந்து வருகிறது. மக்கள் அனைவரும் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது. ‘வேற்றுமையில் ஒற்றுமைஎனும் இந்திய மரபும், சமத்துவம், சகோதரத்துவம் எனும் இந்தியப் பண்பாடும், நீதி, நேர்மை, உண்மை, உரிமை, விடுதலை, நாட்டு நலன் எனும் இந்திய இறையாண்மையையும், இவை அனைத்தையும் தந்த அரசியலமைப்புச் சட்டத்தையும் சூழ்ந்திருக்கும் பேராபத்தை நாம் இனம் காண வேண்டும்.

விழிப்பாய் இருப்போம்! வீறுகொண்டு எழுவோம்! பாடுபட்டுப் பெற்ற சனநாயகத்தைப் படுகுழியிலிருந்து மீட்டெடுப்போம்!

அன்புத் தோழமையில்,

முதன்மை ஆசிரியர்

Comment