No icon

யாவருக்கும் கல்வி:

சம நீதி! சமூக நீதி!

ஒவ்வொரு சமூகத்தின் நாகரிக வளர்ச்சிக்கான அடிப்படைக் கூறு கல்வியே! ஒளிமயமான, வளமான, சமத்துவமான சமூகங்களை உருவாக்க ஒவ்வொரு நாடும் கவனம் செலுத்த வேண்டிய மூலதனம் அதுவே. கல்வியே அறிவார்ந்த தலைமுறையைத் தளிர்க்கச் செய்கிறது. ஆகவேதான், சுவாமி விவேகானந்தர்மனிதனுக்குள் புதைந்திருக்கும் முழுமையை வெளிப்படுத்துவதே கல்வி; அதுவே அறிவு வளர்ச்சிக்கான ஒரே வழிஎன்கிறார்.

அத்தகைய கல்வியின் பெருமையை உணர்ந்ததால்தான் கிரேக்கத் தத்துவவியலாளர் பிளேட்டோ, “கல்வி கற்காமல் இருப்பதைவிட, பிறக்காமல் இருப்பதே மேல்என்கிறார். “பிறப்பதற்கு முன்பே தாயின் கருவறையிலேயேகல்வி’, ‘கற்றல்என்பவை தொடங்குகின்றனஎன்று கூறும் அவர், “அக்கல்வியின் முழுமையான நோக்கமே நல்ல எண்ணங்களை உருவாக்குவதுதான்என்று கற்றலுக்கான வரையறையையும் தருகிறார். ‘நல்லறிவே நல்லொழுக்கம்என்பதுதான் கல்வியின், கற்றலின் அடிப்படைச் சிந்தனையாக இருந்தது. எனவேதான், ‘தனி மனிதர்களைச் சமுதாயத் திற்குப் பயனுள்ளவர்களாக மாற்ற கல்வியே சிறந்த கருவிஎன்று உறுதியாக நம்பினார் தேசத்தந்தை காந்தியடிகள்.

இக்கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்றார் காந்தி. தான் விரும்பும் சர்வோதய சமுதாயம் படைக்கத் தொடக்கக் கல்வியே அவசியம் எனத் திட்டமிட்டார். ‘வாழ்க்கைக்காகக் கல்வி, வாழ்க்கை மூலம் கல்வி, வாழ்க்கை முழுவதும் கல்விஎன்று உன்னத நோக்கம் கொண்டு சர்வோதய கல்விமுறைக்கு வடிவம் கொடுத்தார். மகாத்மாவின் விருப்பத்தை உணர்ந்த விடுதலை இந்தியாவின் முதல் அரசு, அனைவருக்கும் கல்வி வழங்கவார்தா கல்வித் திட்டம்என்ற ஒன்றை உருவாக்கியது. தாய்மொழி மூலம் எல்லா நிலைகளிலும் மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டுமென்று இத்திட்டம் வலியுறுத்தியது. ஆனால், நல்லவைகளை எளிதாக ஏற்க மறுக்கும் நம்மவர்களால், இத்திட்டம் செயலாக்கம் பெறவில்லை. ‘அனைவருக்கும் கல்வி’, ‘தாய்மொழி வழிக் கல்விஎன்ற இரு கூறுகளுமே கேள்விக்குள்ளாக்கப்பட்டன. கல்வி குலத்தொழிலானது; மேட்டுக்குடி மக்களின் உடைமையானது. பலருக்கு எட்டாக் கனியாக்கப்பட்டது.

இந்நிலையில், 1948-ஆம் ஆண்டு டிசம்பர் 10 -ஆம் நாள் பாரிசில் கூடிய உலக நாடுகள் கூட்டமைப்பின் பொது அமர்வில் ‘217-Aஎனும் தீர்மானம் வாயிலாக மனித உரிமைகள் குறித்த உலகப்பொது அறிவிப்புThe Universal  Declaration of Human Rights  (UDHR)’ தாங்கிய ஆவணம் வெளியிடப்பட்டது. அந்த ஆவணத்தின் 26-வது பிரிவானது, ‘அடிப்படைக் கல்வி உரிமை அனைவருக்கும் உண்டுஎன உறுதிப்படுத்தியது. மேலும், இந்த ஆவணமானது, ‘தொடக்கக் கல்வி அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும்; அது  அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்எனவும் வலியுறுத்தியது.

இதே மனநிலையில், இந்திய அரசமைப் புச் சட்டம் உருவாக்கப்படும் போதும், 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக் கல்வி என்பது கவனத்தில் கொள்ளப்பட்டது. 1950-ஆம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது அடுத்த பத்தாண்டுகளில் அதாவது, 1960-க்குள் தொடக்கக் கல்வியை எங்கும் பரவலாக்குவது (Universalisation of Elementary Education – UEE) என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய நாடெங்கும் எதிரொலித்தஅனைவருக்கும் அடிப்படைக் கல்விஎனும் முழக்கம் உலக நாடெங்கும் கவன ஈர்ப்புப் பெற்றது. ஆகவே, யுனெஸ்கோ (United Nations Educational, Scientific and Cultural Organization – UNESCO), 1990-ஆம் ஆண்டைஉலகக் கல்வி ஆண்டாகஅறிவித்து, 155 நாடுகளிலிருந்து 1,500 பிரதிநிதிகளை, மார்ச் 5 முதல் 9 வரை தாய்லாந்தின் ஜோம்டின் நகரில் கூட்டியது. உலக நாடுகளின் தலைவர்கள்அனைவருக்கும் கல்விஎன்ற தலைப்பில் சிந்தித்து, ‘கல்வி என்பது அனைவருக்குமான அடிப்படை உரிமை; ஆண் - பெண் என்ற பாலிய வேறுபாடும், வயது வரம்பும் கடந்து, உலகம் முழுவதும் வாழும் யாவருக்கும் கல்வி கற்கும் உரிமை உண்டுஎன்பதை உறுதிப்படுத்தினர். அதாவது, ‘கல்வி என்பது ஒவ்வொருவருக்கும் வாழ்நாள் முழுமைக்குமான அடிப்படை உரிமைஎன்று தீர்மானிக்கப்பட்டது.       

இந்திய அரசமைப்புச் சட்டம், பிரிவு 21-Aகல்வி-அடிப்படை உரிமைஎன்று கூறினாலும், ஏட்டளவிலேயே இருந்த இந்தியக் கல்வி முறையின் சட்ட வரைவு,  1993-1994 காலப்பொழுதில் தூசி தட்டப்பட்டு, ‘மாவட்டத் தொடக்கக் கல்வித் திட்டம்வாயிலாக உயிர்பெற்றது. 2002-ஆம் ஆண்டு 86-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் தொடங்கி, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஏப்ரல் 1, 2010 அன்று பொறுமையாக நடை முறைக்குக் கொண்டுவரப்பட்ட இச்சட்டம்ஆறு வயது முதல், 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறுவதற்கான அடிப்படை உரிமை உண்டுஎன்பதை உறுதி செய்து நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இது அன்றைய பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாயின் கனவுத் திட்டமாகவும் அறிவிக்கப்பட்டது.

கிராமப்புறங்களில் புதிய பள்ளிக்கூடங்கள் கட்டுதல், பழைய பள்ளிகள் தரம் உயர்த்தப்படுதல், பள்ளிகளில் சுகாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்துதல், தரமான தொடக்கக் கல்வி வழங்குதல், இலவசச் சீருடை மற்றும் பாடநூல் வழங்குதல், பெண் குழந்தைகளுக்குக் கல்வியை உறுதிசெய்தல், மாற்றுத்திறனாளிகளுக்குக் கல்வி உதவித் தொகையுடன் கூடிய வழிகாட்டுதல்... எனப் பல்வேறு செயல்பாடுகளை இத்திட்டம் முன்னெடுத்தது.

இலவசக் கல்வி உரிமைச் சட்டம் இயற்றிவிட்டால், நம் குழந்தைகள் அனைவருக்கும் இலவசக் கல்வியும், தாய்மொழி வழிக் கல்வியும் கிடைத்துவிடும் என்று நாம் நம்பினால் அது நமது மடமையே. இன்றுகுழந்தைகளுக்குக் கல்விஎன்ற தளத்தில் குழந்தைகளும், அவர்களின் பெற்றோரும் படும் வேதனையும், அவமானமும், புறக்கணிப்பும் கொஞ்சமல்ல; கிராமப்புறப் பின்னணி, படிக்காத பெற்றோரின் சரியான திட்டமிடுதல் இன்மை, பொருளாதாரப் பின்னணி, ஏழ்மை, வறுமை, சாதியப் பாகுபாடு எனப் பல்வேறு காரணிகளால் சமூகத்தில் ஒருசாராருக்குக் கல்வி இன்றும் எட்டாக் கனியாகத் தொடர்வது வேதனையளிக்கிறது.

நமது பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் ஏழைகளுக்குக் கல்வி உரிமை உறுதி செய்யப்படுகிறதா? என்பதைக் கல்வி நிறுவனங்கள் நடத்துவோர், பொறுப்பு வகிப்போர் சுய ஆய்வு செய்து பார்க்க வேண்டிய நேரமிது. கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணாக்கருக்கு 25% இடங்கள் ஒதுக்கப்படுகின்றனவா? சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றனவா? கட்டணம் செலுத்த இயலாததால் எவருக்கேனும் கல்வி மறுக்கப்படுகின்றனவா? என்பது நமது சிந்தனைக்கும், செயல்பாட்டுக்குமான கேள்விகள்.

தமிழ்நாடு கத்தோலிக்கத் திரு அவையில், பல்வேறு மறைமாவட்டங்கள், துறவற சபைகள் தங்கள் கல்வி நிறுவனங்களில் தாராள சலுகைகளுடன், பள்ளிக்கட்டணச் சிறப்புச் சலுகைகளுடன்அனைவருக்கும் கல்விஎன்ற உன்னத நோக்கத்தைச் செயல்படுத்தி வந்தாலும், எல்லா நிறுவனங்களிலும் இது ஒரே அளவுகோலாகவும், நடைமுறைச் செயல்பாடாகவும் இருப்பதில்லை என்பதும் எதார்த்தமே.

இத்தகைய சூழலில் செங்கல்பட்டு மறை மாவட்டக் கல்விக் குழுமம், மேதகு ஆயர் நீதிநாதன் அவர்கள் தலைமையில் வெளியிட்டுள்ளகல்விச் சலுகைக்கான திருத்தப்பட்ட நெறிமுறைகள்பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. மாற்றுத் திறனாளிகள், முதலாம் தலைமுறையாகக் கல்வி பயில்வோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், அரசு வேலை அல்லது போதிய வருவாய் இல்லாத பெற்றோரின் பிள்ளைகளுக்குத் தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 50 விழுக்காடும், CBSC - பள்ளிகளில் 25 விழுக்காடும் கல்விச் சலுகை வழங்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறே பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்குத் தமிழ் - ஆங்கில வழிப் பள்ளிகளில் 75 விழுக்காடும், CBSC - பள்ளிகளில் 30 விழுக்காடும் கல்விக் கட்டணச் சலுகை வழங்க வேண்டும் என்றும், இது மறை மாவட்ட மற்றும் துறவறத்தார் நடத்தும்  பள்ளிகளுக்கு இந்தக் கல்வி ஆண்டு முதல் நடை முறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருப்பதுயாவருக்கும் கல்வி: அதுவே சம நீதி, சமூக நீதிஎன்பதை உரக்கச் சொல்கிறது.

ஆகவே, ‘எல்லாச் செல்வங்களுக்கும் மேலான கல்விச் செல்வத்தை நம் குழந்தைகளுக்குக் கொடுப்போம்; அதை அனைவருக்கும் பகிர்ந்தளிப்போம்! சம நீதி கொண்ட, சமூக நீதி நிறைந்த புதிய கற்றறிந்தோர் சமூகத்தைப் படைப்போம்!

அன்புத் தோழமையில்,

முதன்மை ஆசிரியர்

Comment