பொருத்தமற்ற புகழுரையும் போலித்தனமான தற்புகழ்ச்சியும்!
அண்மைக் காலங்களில் அரசியல் மேடைகள் அநாகரிகத்தின் உச்சம் தொட்டு விட்டன. பல கட்சிகள் இயங்கும் சனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், ‘Dissent is the essence of Democracy’ என்பதை ஏற்பவர்களால்தான் சனநாயகம் தழைக்கும். இந்திய அரசியலில் சகிப்புத்தன்மை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. போலியும், பொய்மையும், நயவஞ்சகமும், சூழ்ச்சியும், ஆணவமும் கொண்ட சொற்களும், அருவருப்பு அடையச் செய்யும் உடல் மொழிகளும் தேர்தல் பரப்புரைகளில் பிரதான இடம்பிடித்து விட்டன. குறிப்பாக, பா.ச.க. தலைவர்களிடம் இவை அதிகமாகவே காணப்படுகின்றன. நம் அரசியல் முற்பிதாக்கள் இதுவரை கட்டிக் காத்து வந்த அரசியல் நாகரிகம் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்கத் தொடங்கியிருக்கிறது. பொருத்தமற்ற புகழுரைகளும், போலித்தனமான தற்புகழ்ச்சிகளும், மாயமான பிம்பங்களும் கட்டமைக்கப்பட்டு மக்களை மடமையில் ஆழ்த்துகின்றன. அரசியல் தலைவர்கள் தங்களைப் புகழ்வதற்கென்றே தம்மை அண்டியிருப்பவரைத் தயார் செய்து வைத்திருப்பார்கள். ஆனால், இந்திய வரலாற்றில் முதன் முறையாகத் தன்னைத்தானே ஒருவர் வரையறை கடந்து புகழ்ந்து பேசியிருப்பது சுயமோகத்தின் உச்சகட்டம்.
ஆளும் பா.ச.க.வின் ஒன்றிய முதன்மை அமைச்சர் மோடி உத்திரப்பிரதேச மாநிலம், பஸ்தியில் மே 22 அன்று பரப்புரை மேற்கொண்டபோது, ‘கடவுள்தான் என்னை இந்தப் பூமிக்கு அனுப்பி வைத்தார். நான் சோர்வடையாமல் சுறுசுறுப்புடன் இயங்குவதற்குக் கடவுள் அளித்த சக்திதான் காரணம்’ என்றார். மேலும் ‘என் தாயின் மரணத்திற்குப் பின்னர் பலவற்றைச் சிந்தித்துப் பார்க்கிறேன்; இரத்தமும், சதையும் கொண்ட உடல்ரீதியான சக்திதான் அனைவரையும் இயக்குகிறது. ஆனால், எனக்குள் இருக்கும் ஆற்றல் சாதாரண மனிதர் கொண்டிருக்கும் ஆற்றல்போல் கிடையாது. கடவுளால் மட்டுமே இத்தகைய ஆற்றலைக் கொடுக்க முடியும். ஏதோ ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்பதற்காகக் கடவுள் என்னைப் பூமிக்கு அனுப்பி வைத்துள்ளார்’ என்றும் பேசியிருக்கிறார்; இல்லை பிதற்றியிருக்கிறார்.
“கடவுள் அனுப்பி வைத்தவர் நன்மையின் உருவமாக அல்லவா இருக்க வேண்டும்? கடவுளா பிரிவினைவாதம் பேச வைப்பவர்? கடவுளா மக்கள் மரணத்தில் மகிழ்ந்திருப்பவர்? கடவுளா கலவரத்தை, வன்முறையைக் கட்டவிழ்ப்பவர்?” என்று மேற்கு வங்கத்தின் மம்தா கேள்விக்கணைகளை அடுக்கிக்கொண்டே போகிறார். “மோடி தன்னம்பிக்கையை இழந்துவிட்டார்; மத்தியில் பா.ச.க. மீண்டும் ஆட்சிக்கு வராது என்பதை உணர்ந்து, அவர் தனது பேச்சுகளில் தடுமாறுகிறார்” என்கிறார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ். பிரதமரின் பேச்சு நாடெங்கும் அரசியல் தளத்திலும், விவாத மேடைகளிலும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. வலைதளக் காட்சி ஊடகங்களில் எள்ளி நகையாடப்படுகின்றது.
‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.’ திரைப்படத்தில் இப்படியொரு வசனம் வரும்... ‘கடவுள் இருக்கிறார் என்று சொல்பவனை நம்பலாம்; கடவுள் இல்லை என்று சொல்பவனையும் கூட நம்பலாம்; ஆனால், நான்தான் கடவுள் என்று சொல்பவனை ஒருபோதும் நம்பி விடாதே!’ கமல்ஹாசனின் இந்த மதிப்புமிக்க வார்த்தைகளுக்கு இன்று இலக்கணமாகி நிற்கிறார் மோடி!
மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் போரில் அர்ஜூனனுக்கும், கர்ணனுக்கும் இடையில் நடந்த வில் யுத்தத்தில், அர்ஜூனன் தோற்றுத் திரும்பும்போது, “உன் கையில் உள்ள வில்லால் என்ன செய்ய முடிந்தது?” என்று கேட்டு ஏளனம் செய்தார் தருமன். கோபமடைந்த அர்ஜூனன், தருமனைத் தாக்க சபதம் கொண்டு தன் வில்லால் குறிவைக்கிறார். அதைத் தடுத்து நிறுத்துகிறார் கிருஷ்ணன். ‘இது கொலை; பாவம்! ஆகவே உன் சபதத்தைத் தீர்க்க வேறு ஒரு செயலைச் செய்’ என்று சொல்கிறார். அதாவது ‘ஒருவர்மீது வீண்பழி சுமத்தினால், அது கொலைக்குச் சமம்’ என்றார். அவர் ஆலோசனைப்படி அண்ணன்மீது வீண்பழி சுமத்தினார் அர்ஜூனன். பின்பு, அந்த இழிசெயலுக்குப் பரிகாரமாகத் தற்கொலைக்கு முயல்கிறார் அர்ஜூனன். அப்போதும் ‘இந்தத் தற்கொலைக்குப் பரிகாரமாக நீ வேறொரு செயலில் ஈடுபடலாம்’ என அர்ஜூனனிடம் சொல்லப்பட, ‘அது என்ன செயல்?’ என்று கேட்டபோது, ‘உன்னையே நீ புகழ்ந்து கொள். தன்னைத்தானே புகழ்ந்து பேசுதல் தற்கொலைக்குச் சமமானது’ என்று விளக்கம் கொடுக்கப்பட்டது.
மோடியின் இப்போதைய நடவடிக்கைகள் அர்ஜூனனின் செயல்பாடுகளோடு முற்றிலும் ஒன்றிப்போகிறது. விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதில்லை; எதிர்வினையோ தீவிரமாகவும், அநாகரிகமாகவும், வீண்பழியாகவும் இருக்கிறது; இன்று அது உச்சம் தொட்டு, தன்னைத்தானே கடவுள் அனுப்பியவராகவும், கடவுளுக்கு இணையானவராகவும், அவதாரமாகவும் அவரைப் பிதற்ற வைத்துவிட்டது.
மோடியின் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் எடுபடவில்லை. மதம், சாதி, இந்து, முஸ்லிம் எதிர்ப்புக் கோஷங்களும் எடுபடவில்லை. இராமரும், அவர் கோயிலும் துணை வரவில்லை. கைவசமிருந்த அனைத்து அஸ்திரங்களும் பயனற்றுப் போய் விட்டன. கையறு நிலையில் ‘நானே அவர்’ என்றாகிவிட்டார். “எதுவும் தெரியாதவரெல்லாம் எல்லாம் தெரிந்தவர்போல் பேசுகின்றனர்; நானோ எனக்கு எதுவும் தெரியாது என்ற ஒன்றை மட்டுமே தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறேன்” என்றார் கிரேக்கச் சிந்தனையாளர் சாக்ரடீஸ். அந்த மேதை கற்பித்தத் தன்னடக்கத்தின் எதிர்துருவமாக நிற்கிறார் நமக்கு ஒன்றிய முதன்மை அமைச்சராக வாய்த்த மோடி அவர்கள்.
அளவுக்கு அதிகமான விளம்பரமும், போலிப் புகழுரைகளும் ஒரு தலைவரைத் தவறான வழியில் திசை திருப்பிவிடும் என்று காந்தி கருதியதால், தன்னை ‘மகாத்மா’ என்று பிறர் அழைப்பதை வெறுத்தார். ‘மகாத்மா’ என்ற பட்டத்தை ஒருபோதும் தான் விரும்புவதில்லை என்று பலமுறை தன் அதிருப்தியை வெளிக்காட்டியிருக்கிறார். “எல்லை மீறிய புகழ் வெளிச்சம் பாசிசத்திற்கு வழிவகுக்கும்” என்றார் சோசலிச சிற்பி நேரு. இவர்கள் மகான்கள், தீர்க்கதரிசிகள்! இவர்களின் கூற்றுகள் இன்று உண்மையாகிப் போயின.
தனிமனிதத் துதி, பொய்யுரை, பொருத்தமற்ற புகழுரை, போலித்தனமான ஆளுமைக் கட்டமைப்பு என்ற பா.ச.க.வின் நாடகம் இன்று வெளுத்துப்போனது. முகத்துதி மனிதர்களும், பிழைப்புவாதிகளும் எல்லாக் கட்சிகளிலும் நீக்கமற நிறைந்திருந்தாலும், பா.ச.க. முன்னிறுத்தும் மோடி அதன் உச்சம் தொட்டு விட்டார். ‘நாட்டின் நலனுக்காகவே மூன்றாவது முறையாகப் பிரதமராக மக்களின் ஆசியைக் கோருகிறேன்’ என்று நாடகமாடுகிறார். அதற்காக அவரது நாவு இப்படியெல்லாம் நர்த்தனமாடுகிறது.
‘பொருத்தமற்ற போலிப் புகழுரைகளில்
வார்த்தைகள் இயல்பிழந்து
வன்புணர்ச்சிக்கு ஆளாகும் போதெல்லாம்
அவமானம் தாளாமல்
தூக்கில் தொங்குகிறது மொழி!’
என்ற கவிஞர் பூங்குன்றனின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன!
அன்புத் தோழமையில்,
முதன்மை ஆசிரியர்
Comment