No icon

காவிகளுக்குக் கடிவாளமிட்ட காங்கிரஸ்!

மக்களாட்சிக் கொள்கை கொண்ட ஒரு  நாட்டில், மக்களே வரலாறு படைக்கிறார்கள்என்ற மார்க்சியப் பார்வை, நடந்து முடிந்த இந்தியத் திருநாட்டின் பதினெட்டாவது மக்களவைக்கான தேர்தல் முடிவுகள் மூலம் மீண்டும் உலகிற்கு உறுதிபட, உரக்கச் சொல்லப்பட்டிருக்கிறது. நாட்டை ஆள விரும்புவோர் அம்மக்களின் மனங்களை முதலில் ஆளக்கூடியவர்களாகவும், அந்த மக்களை நெறிப்படுத்தக் கூடியவர்களாகவும், அம்மக்களின் வாழ்வியலுக்கான உயர்ந்த  இலட்சியத்தைக் கொண்டவர்களாகவும், அதைத் துரிதமாகச் செயல்படுத்த நல்ல வழிகாட்டுதலைக் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற செய்தியையும் கூர்மைப்படுத்தியிருக்கிறது இந்தத் தேர்தல் முடிவுகள்.

மக்களாட்சியின் மாண்பை உலகிற்கு எடுத்துச் சொல்லும் நம் இந்தியத் திருநாட்டின் 18-வது மக்களவைக்கான 543 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நாடு முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில், எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ‘400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று பா... மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்என ஒன்றிய முதன்மை அமைச்சர் மோடியும், உள் துறை அமைச்சர் அமித்ஷாவும் ஆணவத்தோடு பரப்புரை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது அதன் நிலைமை  தலைகீழாக மாறியிருக்கிறது. பா... தனது தேசிய சனநாயகக் கூட்டணியோடு 292 இடங்களையும், ‘இந்தியாகூட்டணி 234  தொகுதிகளையும் வென்றிருக்கின்றன.

தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவைப்படும் நிலையில், பா... வெறும் 240 இடங்களை மட்டுமே வென்றதால் தனது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு பலத்துடன் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்ற தர்ம சங்கடமான சூழல் ஏற்பட்டுவிட்டது. ‘இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் வருடத்திற்கு ஒரு பிரதமர் என்று ஐந்து ஆண்டுகளுக்கு ஐந்து பிரதமர்களை நாடு சந்திக்கும்என்று கூட்டணி ஆட்சியை ஏளனம் செய்து, எள்ளி நகையாடி வந்த மோடி, தற்போது தங்கள் கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன்தான் மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராகிறார் என்பது விசித்திரமான திருப்பம்.

ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பீகார் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு பெரும் கூட்டணிக் கட்சிகளின் தயவு இல்லாமல் பா...-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியால் மத்தியில் ஆட்சியை இம்மி அளவு கூட நகர்த்திவிட முடியாது என்பதுதான் பா...விற்கு வருந்தத்தக்க கள நிலவரம். ஆகவே, ‘கூட்டணி ஆட்சியின் மூலம் மோடி பிரதமராகத் தற்போது கூட்டணி கட்சிகளின் ஆதரவைக் கேட்டு அமித்ஷா கையேந்தி நிற்கிறார்; பா... விரித்த வலையில் அக்கட்சியே மாட்டிக் கொண்டதுஎன்று கிண்டல் அடித்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் இரமேஷ்.

பா...விடம் விலைபோன ஊடகங்களின் தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தையக் கருத்துக் கணிப்புகள் அனைத்தும்  பொய்த்துப்போன சூழலில், மக்களின் மனக்குமுறலைப் பிரதிபலிக்கும் இத்தேர்தல் முடிவுகள் இந்திய நாட்டிற்கும், உலக நாடுகளுக்கும்  பல பேருண்மைகளை முன்வைக்கின்றன. “சிந்தனையில் செருக்குடன் சிந்திப்போரை இறைவன் சிதறடிக்கிறார்” (லூக்கா 1:51) என்ற திருவிவிலிய வார்த்தைகளுக்கேற்ப, ஆணவத்தோடு அரியணையில் அமர்ந்தோரை மக்கள் கதிகலங்க வைத்திருக்கிறார்கள். போலியும், பொய்மையும் நிரந்தர இருத்தலுக்கான வரையறை கொண்டவை அல்ல என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம் தெளிவுபடுத்தி இருக்கின்றனர். உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை மக்கள் இன்று தெளிவு பெற்றிருக்கின்றனர் என்பதே கண்கூடு.

மேலும், ‘சர்வாதிகாரத்தனமான ஒற்றையாட்சி முறைக்கு மக்கள் ஒருபோதும் ஆதரவாக இல்லை என்பதை இந்நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றனஎன்றும், ‘மக்களின் ஆன்மிக நம்பிக்கைகளை அரசியல் இலாபத்திற்குப் பயன்படுத்த நினைக்கும் மதவாத சக்திகளைக் கோவில் கட்டிய மண்ணிலேயே வீழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் இறைநம்பிக்கை உள்ள வாக்காளர்கள்என்றும் விமர்சிக்கிறார் தமிழ்நாட்டின் முதல மைச்சர் மு.. ஸ்டாலின்.

சாதியையும், மதத்தையும், கோவிலை யும், வழிபாட்டையும் கையிலெடுத்துப் பரப்புரையாக மேற்கொண்ட  பா...விற்கு மக்கள் தக்க பாடம் புகட்டி இருக்கிறார்கள். அயோத்தியில் கட்டப்பட்ட இராமர் கோவிலே வெற்றிக்கான மூலதனமாக அமையும் என்ற அவர்களின் கணக்கு, தப்புக் கணக்காகிப் போனது. இராமருக்குக் கோவில் கட்டியத் தொகுதியிலேயே அவர்கள் தோற்றுப் போனார்கள். அரசியலில் மதம் ஒருபோதும் எடுபடாது என்பது மீண்டும் எண்பிக்கப்பட்டு விட்டது. மேலும், ‘இராமர் கோவில் கட்டப்பட்ட அயோத்தி பைசாபாத் தொகுதியின் வெற்றியே, இந்தியா சொல்லும் செய்தி. அதாவது, பொதுத் தொகுதியில் நின்ற சமாஜ்வாதி கட்சியின் தலித் வேட்பாளர் அவதேஷ் பிரசாந்த் மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறார். மதவெறி அரசியலின் அடையாளங்களாக்கப்பட்ட அயோத்தி, இன்று சமத்துவத்தின் அடையாளமாக ஒளிர்கிறது; அன்பே எங்கும் வெல்லும்என்கிறார் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு. வெங்கடேசன்.

ஆகவே, சிறுபான்மை மக்களின் நெஞ்சில் இருந்த அச்ச உணர்வு இன்று நீங்கியிருக்கிறது. ஏறக்குறைய பா...விற்கு இணையானஇந்தியாகூட்டணியின் வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு வழங்கியுள்ள நெறிமுறைகளைப் பாதுகாக்க வழி பிறந்திருக்கின்றது.

மொத்தம் 99 தொகுதிகளைக் கைப்பற்றியதன் மூலம் நாடாளுமன்ற அவையில் நாட்டிலேயே இரண்டாவது மிகப்பெரிய கட்சியாக இந்திய தேசிய காங்கிரஸ் இந்த முறை அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த வளர்ச்சி, படுகுழியில் கிடந்த காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய புத்தெழுச்சியாகும். கடந்த 2019 -ஆம் தேர்தலில் வெறும் 55 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ், இந்த முறை கூடுதலாக 44 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆகவே, தோற்றாலும் காங்கிரசுக்கு மட்டற்ற  மகிழ்ச்சியே. ஆனால், மறுபுறம் வென்றாலும் பா...விற்கு இத்தேர்தல் பெரும் சோகமே!

அதிகார பலம் பொருந்தியவராக வலம் வந்த மோடி என்ற பிம்பம், வாரணாசி தொகுதியின் முதல் நான்கு சுற்று வாக்கு எண்ணிக்கையிலேயே உடைந்து நொறுங்கியது. எப்படியோ தப்பிப் பிழைத்த மோடியின் பேச்சிலும், கருத்திலும், நடை, உடை பாவனைகளிலும், ஏன், உடல் மொழியிலும் இனி வரும் நாள்களில் மாற்றம் இருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். வரலாறு ஒருபோதும் பின்னோக்கிச் செல்லாது என்பதை இப்போது அவர் உணர்ந்திருப்பார். வழக்கமாக வட இந்தியப் பகுதிகளில் அதிக இடங்களைக் கைப்பற்றும் பா... இந்த முறை மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிர்ச்சியைக் கண்டிருக்கிறது. இம்முறை சில இடங்கள் பறிபோகும் என்று தேர்தலுக்கு முன்பாகவே கணித்திருந்த இவர்கள், ‘தெற்கில் எங்களின் வெற்றியை அதிகரிப்போம்என்று கூவி(றி) வந்தனர். அவர்கள் கூறியதைப் போலவே, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா எனத் தென் மாநிலங்களில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றாலும், தமிழ் நாட்டில் அவர்களால் தடம் பதிக்க இயலவில்லை. கோடை மழை பொழிந்து குளங்களில் தண்ணீர் தேங்கியிருந்தாலும், தாமரை ஏனோ தமிழ்நாட்டில் மலரவே இல்லை! தமிழ்நாட்டிற்கு ஏழு முறை வந்த பிரதமர் மோடியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி முகம் காண முடியவில்லை. இது பெரியார், அம்பேத்கர் போன்றோரின் சிந்தனைகள் வேரூன்றிய சமத்துவ பூமி; சகோதரத்துவ களம், மனிதநேயம் மலரும் மண் என்பது மீண்டும் எண்பிக்கப்பட்டிருக்கிறது.  ‘வாக்கு விகிதம் கூடி இருக்கிறதுஎன்று வாய் ஜாலம் பேசினாலும், அது தன்னுடன் ஒட்டி உறவாடிய .தி.மு..வைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்துக் களவாடிய வாக்குகளே.

2022 -ஆம் ஆண்டு விருதுநகர் பரப்புரையில்நாற்பதும் நமதே; நாடும் நமதே!’ என்று முழங்கிய தமிழ்நாடு முதல்வரின் இலட்சிய முழக்கம் இன்று நனவாகியிருக்கிறது. சமூக நீதிக் கொள்கையில் உறுதியும், கூர்ந்த தொலைநோக்குப் பார்வையும், அயராத உழைப்பும், சிந்தனைத் தெளிவும் தி.மு..வை 40 இடங்களிலும் வெற்றி காணச் செய்திருக்கிறது. இந்த மாபெரும்  வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்க்கிறது.

இறுதியாக, நாடாளுமன்றத்தில் சரிக்குச் சரியாகஇந்தியாகூட்டணியின் உறுப்பினர்கள் இடம்பெற இருப்பதால் சனநாயகம் கட்டிக் காக்கப்படும்; நாடாளுமன்ற அவையின் மாண்பு காக்கப்படும் என்பதே நம் எதிர்நோக்கு. மேலும், சர்வாதிகாரப் போக்கில் சட்டம் இயற்றுவதும், ‘பெரியண்ணன்மனப்பான்மையில் மற்றக் கட்சிகளை அடக்கி ஒடுக்குவதும், உடைப்பதும், மாற்றாந்தாய் எண்ணத்தில் சில மாநிலங்களைப் பார்ப்பதும், இந்துத்துவா கொள்கைகளை முழங்குவதும், சிறுபான்மையினருக்கு எதிராகப் பெரும்பான்மையினரைத் தூண்டி விடுவதும், பாசிசப் பிரிவினைச் சிந்தனைகளை விதைப்பதும், அம்பானி-அதானிகளுக்கு இந்த நாட்டின் சொத்துகளைத் தாரைவார்ப்பதும் இனி இவர்களுக்குப் பெரும் சவாலாகவே இருக்கும்.

எச்சூழலிலும் கூட்டணிக் கட்சிகள் தவறுகளைத் தட்டிக் கேட்கும் என்றும், எதிர்க்கட்சியின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் அங்கே அவர்களால் ஆரோக்கியமான விவாதங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் நாம் உறுதியாக நம்புகிறோம்சுருங்கச் சொன்னால், இத்தேர்தல் முடிவுகள் பட்டுப்போன சனநாயக விருட்சத்தைத் துளிர்விடச் செய்திருக்கின்றன என்பதே பலருக்கு மகிழ்ச்சி!

அன்புத் தோழமையில்,

முதன்மை ஆசிரியர்

Comment