No icon

மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!

புகையும் பா.ச.க.

தனித்து ஆட்சியமைக்க அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பது ஒருபக்கம் இருந்தாலும், பா... தொடர்ந்து மூன்றாவது முறையாக அரியணை ஏறுகிறது என்ற வெற்றிக் கொண்டாட்டத்தின் அதிர்வுகள் அடங்குவதற்குள், மணிப்பூர் மீண்டும் வன்முறையில் பற்றி எரியத் தொடங்கிவிட்டது. ‘400 நாள்களுக்கும் மேலாகத் தொடரும் இந்தக் கலவரத்தை எப்படி மோடி கட்டுக்குள் கொண்டுவரப் போகிறார்?’ என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் இன்று மீண்டும் பேசு பொருளாகியிருக்கிறது.

மணிப்பூரில்மெய்தி’, ‘குகிஇனக் குழுக்களிடையே தொடரும் இந்தக் கலவரத்தின் கொடியக் காட்சிகள் நாட்டை மட்டுமல்ல, உலகையே உலுக்கி வருகின்றன. மனிதாபிமானமற்ற கொடூரங்களும், கொடுமைகளும் அங்கே இருதரப்பிலும் நிகழ்ந்திருக்கின்றன. ஆயினும், வன்முறையின் ஆரம்பத்தை அறியும்போது அதிர்ச்சிகளே விஞ்சி நிற்கின்றன. பெரும்பான்மையாக இருக்கும்மெய்திமக்கள், தங்களையும் பழங்குடியினர் என அறிவிக்க வேண்டும்; ‘குகிமக்களுக்கு இணையான சலுகைகளை வழங்க வேண்டும் என எழுந்ததன் விளைவு இது. இது உரிமைப் போராட்டமாக உருவெடுக்கும் முன் மோதல், கலவரமாகத் தூண்டிவிடப்பட்டது என்பதே கள ஆய்வுகள் தரும் அதிர்ச்சி நிறைந்த செய்திகள்.

உண்மையை உரைக்கும் ஊடகங்களும், களப்பணி ஆற்றும் சமூக ஆர்வலர்களும் தரும் செய்திகளோ ஆட்சியாளர்களின் மனசாட்சியைக் கேள்வி கேட்க வைக்கின்றன. அரசு மற்றும் காவல்துறையின் உதவியோடுகுகிபழங்குடி மக்களின் நிலங்களையும், உடைமைகளையும், உயிர்களையும்மெய்திஇனக்குழு அமைப்புகள் பறிக்கத் தொடங்கியதன் விளைவே, இம்மாநிலம் போர்க்களமானதன் ஆரம்பம் என்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஏன் இத்தகைய எண்ணம்? பெரும்பான்மையினர் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருக்க வேண்டுமே தவிர, அபகரிப்பவர்களாகவா இருப்பார்கள்? முரண் கொண்ட சமூக வாழ்வியலாக அல்லவா இது இருக்கிறது? வளமையானவன் வறியவனைத் தூக்கிவிட அல்லவா வேண்டும்! இவர்கள் எண்ணிக்கையில் குறைவு, ஆதரவற்றவர்கள் என்பதால் அடக்கி ஒடுக்குவதா முறையான செயல்? மானுடச் சமூகமே வெட்கித் தலைகுனியும் அறநெறியற்ற கருத்தியல் அல்லவா இது! இத்தனை வன்முறைப் போராட்டங்களுக்கும், பாலியல் கொடுமைகளுக்கும், உயிர்ப்பலி நிகழ்வுகளுக்கும் ஆளும் பா... அரசும், மீண்டும்தாய் மதம் திருப்பசங்கப் பரிவாரங்களால் வடகிழக்கு மாநிலங்களில் இறக்கி விடப்பட்டிருக்கும் வனவாசி அமைப்புகளும் இதற்குக் காரண கர்த்தாக்கள். வேலியே பயிரை மேயும் நிகழ்வாக அல்லவா இது இருக்கிறது!

மக்களவைத் தேர்தலுக்குப் பின் மீண்டும் தலைதூக்கியிருக்கும் இப்பிரச்சினை இன்று உச்சம் தொட்டிருக்கிறது. மெல்ல மெல்ல இது நகர்ந்து பா...வின் மதவெறுப்பின் எல்லையை இன்று தொட்டு விட்டது. இரு இனக் குழுக்களுக்கிடையேயான மோதல் தற்போதுகுகி’, ‘மெய்தி’, ‘நாகா’, ‘இஸ்லாமியர்கள்எனப் பலதரப்பட்ட மக்கள் வாழும் மாவட்டத்தில் மீண்டும் பற்றி எரியத் தொடங்கிவிட்டது. 70-க்கும் மேற்பட்ட வீடுகள், சோதனைச் சாவடிகள் தீவைக்கப்பட்ட சூழலில், ஜிரிபாம் மாவட்டமே தீக்கிரையாகி இருக்கிறது. மோடியின் பதவி ஏற்பு நிகழ்வுக்கு மணிப்பூர் முதல்வர் பிரேசிங் வந்து செல்வதற்குள் இந்நிகழ்வு நடந்தேறியிருக்கிறது. இது ஆளும் பா...விற்குக் கடும் நெருக்கடியையும், ஆர்.எஸ்.எஸ். மத்தியில் சலசலப்பையும், விமர்சனங்களையும் எழுப்பியிருக்கிறது.

ஆகவேதான், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “பத்தாண்டுகளுக்கு மேல் அமைதியாக இருந்த மணிப்பூர், திடீரெனத் தூண்டப்பட்ட வன்முறையால் இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது. யார் இதைக் கவனிப்பது? முன்னுரிமை அடிப்படையில் இந்தப் பிரச்சினைகளுக்குக் கவனம் செலுத்த வேண்டியது நமது கடமைஎன்று கருத்துத் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் தோல்வியின் பின்னணியில், குறிப்பாக, மணிப்பூரிலுள்ள இரண்டு தொகுதிகளிலும் பா... மண்ணைக் கவ்வியதால் பா...வின் தலைமைப் பீடத்தைத்திமிர் பிடித்தக் கும்பல்என்று குறிப்பிட்டிருக்கிறார் இராஷ்ட்ரிய சுயம் சேவா சங்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ் குமார். மேலும், “நான்தான் வேலை செய்தேன் என்று பெருமிதம் கொள்ளாதீர்கள்; நாட்டிற்குத் தன்னலமற்ற உண்மையான சேவை தேவை. கண்ணியத்தைப் பின்பற்றுபவனுக்கு அதிகாரம் இருக்காது. அதுதான் உண்மையான சேவைஎன்று மோகன் பகவத் மறைமுகமாக மோடியை விமர்சித்துள்ளார். பா...வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-சின் தலைவரிடமிருந்து எழும் இந்த விமர்சனம் மோடி மற்றும் நட்டாவின் எதிர்கால இருப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

சிறுபான்மையினரைக் காக்க வேண்டும்என எழும் ஆர்.எஸ்.எஸ்.-சின் குரல் உண்மையான தேசப்பற்றினால், மக்கள் நலனால் எழுந்த கருத்து அல்ல. ஆர்.எஸ்.எஸ். - பா...வுக்கிடையே நிகழும் பனிப்போரின் வெளிப்பாடு. தேர்தலில்பா...-வுக்கு இனி ஆர்.எஸ்.எஸ். தேவையில்லைஎனக் குறிப்பிட்ட நட்டா மற்றும் மோடி - அமித்ஷா ஆகியோரின் அதீத நம்பிக்கை தோல்வியையே சந்திக்க வைத்திருக்கிறது. ஆகவேதான், தேர்தல் முடிவுகள் வெளியான சில நாள்களிலேயே அரசியல் காட்சிகள் மாறின. ‘தேர்தல் பிரச்சாரத்தில் நாகரிகத்தைக் கடைப்பிடிக்கவில்லை’, ‘அகங்காரமாக நடந்துகொண்டவர் யார்?’ என்றும், ‘உண்மை சேவகர் யார்?’, ‘ஆணவம் கொண்டவர்கள் யார்?’, ‘கடும் விமர்சனத்துக்குரிய கருத்துகளைத் தெரிவித்தது யார்?’ என்பதை எல்லாம் சூசகமாய்க் குறிப்பிட்டு தனிமனித துதியால் மூழ்கியிருந்த மோடியை விமர்சித்துள்ளார். ஆகவே, மணிப்பூர் விவகாரத்திற்கு வன்முறை நிகழ்வுகளில் தனிக்கவனம் கொண்டிருக்க வேண்டும் எனச் சாடுகிறது நாக்பூர் தலைமை. இது மறைமுகமாக மோடியைக் குறித்தே சொல்லப்பட்டதாகக் கருதப்படுகிறது. இங்கே ஒன்று மட்டும் நன்கு புரிகிறது. பா...விற்கும், ஆர்.எஸ்.எஸ்-க்கும் இடையே உறவுகளில் ஒட்ட இயலாத அளவுக்கு விரிசல் ஏற்பட்டிருக்கிறதுஇந்த உறவு விரிசல்தான் அவர்களுக்குள்ளே உண்மையை உலகிற்கு எடுத்துச்சொல்ல வைத்திருக்கிறது. தொழில் நுட்பத்தின் உதவியுடன் பொய்களைப் பரப்புவது சரியல்ல என்று பா...வையே விமர்சிக்கத் துணிந்துள்ளனர். ஜூன் 10-ஆம் தேதி மோகன் பகவத் ஆற்றிய உரை பல பேருண்மைகளைப் பா...வின் உண்மைத் தன்மையைத் தோலுரித்திருக்கிறது.

பா... ஆட்சியில் அமர்ந்து வெற்றிக் களிப்பில் இருந்தாலும், மோடியும், அமித்ஷாவும் பழைய முரட்டுப் பயில்வான்களாக இருக்க முடியாது. ஆட்ட விதிகளைக் கறாராகக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் ஆளாகியிருக்கிறார்கள் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். எது எப்படியோ, மத்தளத்திற்கு இருபக்கம் அடி; ஆனால், பா...விற்கு ஒருபக்கம் கூட்டணிக் கட்சிகள், மற்றொரு பக்கம் எதிர்க்கட்சிகள், இன்னொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ். எனத் திரும்பும் திசையெங்கும் அடி விழுகிறது என்பது மட்டும் நன்றாகவே தெரிகிறது.

அன்புத் தோழமையில்,

முதன்மை ஆசிரியர்

Comment