No icon

அடித்தளமும், ஆணிவேரும்!

(ஜூலை 28: தாத்தா-பாட்டியர் தினம்)

விண்ணைத் தொடுமளவு உயர்ந்து நிற்கும் கோபுரங்களைப் பார்த்து விழிகள் வியப்பில் விரிய, பரவசப் பக்தி இதயத்தில் பொங்கிப் பெருக கைகூப்பி வணங்கும் மனிதர்கள், அந்த அழகிய கோபுரத்தைத் தாங்குவதற்காக மண்ணில் மறைந்து நிற்கும் அடிக்கற்களை மறந்தும் நினைப்பதில்லை! விரிந்திருக்கும் கிளைகள் பரப்பும் மரத்தின் நிழலில் இளைப்பாறி, பழுத்திருக்கும் கனிகளைப் பறித்து உண்ணும் வழிப்போக்கர்கள் எவரும் அந்த மரத்தின் வேர்களுக்கு நன்றி சொல்லியதாகச் சரித்திரமில்லை.

அடிக்கற்கள் இல்லாமலா கோபுரங்கள் உயர்ந்து நிற்கின்றன? ஆணிவேர் இல்லாமலா மரங்கள் பரந்து, விரிந்து, உயர்ந்து நிற்கின்றன? இந்தப் பேருண்மை அறிந்திருந்தும், மனிதன் ஏனோ அவற்றை ஒருபோதும் வணங்குவதில்லை.

உறவுகளுக்கு அடையாளமாக இருப்பது குடும்பம். அக்குடும்பத்தின் அடித்தளமாய், ஆணிவேராய் இருப்பது நம் முன்னோர். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கொருவர் உறவு கொண்டு வாழும்போது அது மதிப்பீடுகளின் பல்கலைக்கழகமாகிறது. அன்பு, அமைதி, நேர்மை, உண்மை, தியாகம், கருணை, இரக்கம் என்ற படிநிலைகளில் கட்டமைக்கப்படும் மதிப்பீடுகளில் உறவு நிலைகள் அங்கே உருவாக்கப்படுகின்றன. ஒருவருக்குத் தன் தந்தையோடும், தாயோடும், உடன்பிறந்த சகோதர-சகோதரிகளுடனும், தன் முதியவர்களிடமும் உள்ள உறவே அறநெறி வாழ்வியலுக்கு அடிப்படையானதாகிறது. குடும்பமே உறவுச் சமூகத்தின் அடித்தளமாகிறது. இந்த உறவுச் சமூகத்தைக் கட்டமைக்கக் கூடியவர்கள் நம்முடைய முதியவர்கள்; அனுபவ ஞானிகள்!

ஆகவேதான், “முதியவர்கள் வரலாற்றை, கோட்பாட்டை, நம்பிக்கையை நமக்கு அவர்களின் பாரம்பரியச் சொத்தாக விட்டுச் செல்கின்றனர்என்கிறார் நம் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், “அவர்கள் நன்கு விளைந்த திராட்சைச் செடிக்கு ஒப்பானவர்கள்; மிகச்சிறந்த உயர்வான பாரம்பரியச் சொத்தை நமக்கு வழங்கக்கூடிய ஆற்றலை அவர்கள் தங்களுக்குள்ளே கொண்டிருக்கின்றனர்என்றும் அவர்களைச் சிறப்புச் செய்கின்றார். அத்தகைய முதியோர்கள்தானே சமூகத்தின் அடித்தளம்! அவர்கள்தானே சமூகம் என்னும் கட்டடத்தின் மூலைக்கற்கள்! அவர்கள் என்றும் மாண்புடன் மதிக்கப்பட வேண்டாமா? இன்று மாண்புடன் அவர்கள் மதிக்கப்படுகிறார்களா? என்பதே நம் கேள்வி. அவர்கள் தொந்தரவு தரக்கூடியவர்களாகப் பார்க்கப்படுவதும், அதனால் அவர்கள் குடும்பங்களில் ஓரங்கட்டப்படுவதும் அன்றாடக் காட்சிகளாகின்றன. தங்கள் முதியவர்களைப் பாதுகாக்கத் தவறியவர்கள் வாழும் சமூகம், தங்களின் எதிர்காலத்தையும், வாழ்வின் நம்பிக்கையையும் தொலைத்தவர்கள் வாழும் சமூகம் என்பதை மறந்துவிடுகிறோம்.

மனித வாழ்வு என்பது புனிதமானதும், அதேவேளையில் குலைந்து போகும் தன்மையும் கொண்டது என்பதையும் அறிவோம். சமூகத்தின் ஒவ்வொரு கட்டமைப்பும் வாழ்க்கையை அங்கீகரிக்கும் அடிப்படை உரிமைகளைத் தழுவியே உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், குடும்ப வாழ்வையும், அதன் சமூகக் கட்டமைப்பையும் உருவாக்குகின்ற அடிப்படையான மதிப்பீடுகளுக்கு எதிராக இன்று எண்ணற்றத் தாக்குதல்கள் உள்ளும் புறமும் எழுந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய வாழ்க்கையில் மனிதர்கள் இன்று நுகர்வுக் கலாச்சாரத்தில் சந்தைப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டுப் புறந்தள்ளப்படுகின்றனர். அதாவது, ‘தேவைப்படுவது-தேவையற்றதுஎன்ற கண்ணோட்டத்தில், பயன்படுத்தித் தூக்கி எறியும் பொருளாகப் (Use and Throw) பார்க்கப்படுகின்றனர். இவ்வாறு தூக்கி எறியும் கலாச்சாரம் பலரின் வாழ்க்கையைத் துயரத்தோடு முற்றுப்பெற வைக்கிறது என்பதையும் மறந்துவிடக்கூடாது.

பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் கலாச்சாரத்தை நாம் உருவாக்கியதால், அது இன்று அதிவேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. எங்கும் சுயநலச் சமூகத்தை அது உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஒருவர் மற்றவரைச் சுயநலத்திற்காகப் பயன்படுத்துவது, அடிமையாக்குவது என்ற சிந்தனைகளையும் தாண்டி, புறந்தள்ளும் புதுவகையான கலாச்சாரத்தை அது இன்று உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அப்படிப் புறந்தள்ளப்படக்கூடியவர்களில் முதியவர்கள் ஓர் அங்கத்தினர் என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும்.

ஒருவரைப் புறந்தள்ளுவது என்பது, அடிப்படையாக நாம் வாழும் சமூகத்தில் அவர்கள் எத்தகைய அங்கமாக இருக்கிறார்கள்? எப்படி மதிக்கப்படுகிறார்கள்? என்பதைக் குறிக்கிறது. புறந்தள்ளப்படுபவர்கள் சமூகத்தின் அடி நிலையிலோ, அதன் விளிம்பு நிலையிலோ உறவுகளை இழந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். அவர்கள் சமூகத்தின் அங்கமாகவே கருதப்படுவதில்லை; மதிக்கப்படுவதில்லை. அவர்கள் சமூகத்தில் எஞ்சியவர்களாகவே கருதப்படுகிறார்கள். நம் குடும்பத்தின் முதியவர்கள் இதில் விதிவிலக்கல்ல.

முதியவர்கள் குறிப்பாக நோய்வாய்ப்பட்ட சூழலிலும், பலவீனமான நிலையிலும் புறந்தள்ளப்படுகிறார்கள் என்ற உண்மையைச் சமூக மக்கள்தொகை புள்ளி விவரம் குறித்துக்காட்டுகிறது. மனித உறவுகள் எப்போதும் ஒருவரை ஒருவர் சார்ந்த உறவுகள் என்பதைப் பல வேளைகளில் நாம் மறந்து விடுகிறோம். மனிதனுடைய வாழ்நாளின் பல்வேறு நிலைகளில் இது அன்றாடம் வெளிப்படுத்தப்படுகிறது. முதுமையிலும், நோயிலும், இயலாமையிலும், துயரமான சூழ்நிலையிலும் மிகவும் வெளிப்படையாகவே இதைக் காண முடிகிறது.

முதுமை துயரமானதுஎன்ற எதிர்மறை எண்ணத்தை நாம் களைந்தால்தான், மூதாதையரின் முழுமை நோக்கிய முன்னேற்றத்தை நம்மால் காண முடியும். ஆகவே, உடல் பலவீனம், முதுமை, இயலாமை என்பவை எல்லாம் ஒருவரை ஓரம் கட்டுவதற்கான காரணிகளாக ஒருபோதும் நாம் கருதக் கூடாது. மேலும், முதியவர்கள் இன்று அடையும் மிக மோசமான இடர்ப்பாடுகள் உடல் பலவீனமோ, இயலாமையோ அல்ல; மாறாக, கைவிடப்பட்ட நிலையும், புறந்தள்ளப்படும் நிலையும், அன்பு செலுத்தப்படாததுமே என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும்.

குடும்பம் என்பது ஒற்றுமையை உருவாக்கும் இல்லம்; அனைவரையும் ஏற்றுக்கொள்ளும், பண்புகளைப் பேணிக்காக்கும் பள்ளிக்கூடம்; அறநெறிகளைப் போதிக்கும் ஆசான். ஆகவே, ஒற்றுமையை உருவாக்கும் உறவுகளை வளர்க்கக்கூடியகுடும்பக் கல்விஅங்கே கற்பிக்கப்பட வேண்டும். சுயநலத்தில் விழுந்து விடாதிருக்கவும், ‘நான்என்பதைக் களைந்து, ‘நாம்என வாழவும் குடும்பம் கற்றுத்தர வேண்டும். மனித வாழ்வுக்குப் புறம்பான தன்மைகளைக் களைந்திட வேண்டும். அர்ப்பணிப்பு, ஒற்றுமை எனும் பண்புகளால் ஒருவரை ஒருவர் பராமரிக்கும் மனித வாழ்வின் அடிப்படைப் பண்புகளை அவசியம் கற்க வேண்டும்; கற்பிக்கப்பட வேண்டும். ஆகவே, ஒட்டுமொத்தச் சமூகத்தின் முன்பாக முதியவர்களைச் சமூகத்தின் முக்கியமான நபராக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொருவரும் தத்தம் குடும்பங்களில் சாட்சியம் பகிர்வது இன்று காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. எனவேதான், திருத்தந்தை பிரான்சிஸ், “எப்போது முதுமையிலும், இயலாமையிலும், நோயிலும், இறக்கும் தருணத்திலும் ஒருவருடைய வாழ்வை மதிப்புமிக்கதாக ஒரு சமூகம் கருதுகிறதோ, அப்போதுதான் அச்சமூகம் மனித வாழ்வை உண்மையாகவே அலங்கரிக்கிறதுஎன்று குறிப்பிடுகிறார்.

மேலும், குடும்பம் என்பது ஒரு குழும வாழ்க்கை கொண்டது. எனவேதான், திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல், “குடும்பம் என்பது அதன் உறுப்பினர்களின் கூட்டுச்சேர்க்கை அல்ல; மாறாக, அது உறுப்பினர்களின் சமூகம்என்று குறிப்பிடுகிறார், சமூகம் என்பது சாதாரணமாக உறுப்பினர்களின் கூட்டுச்சேர்க்கை என்பதைவிட, ஆழமான பொருள் அதில் பொதிந்திருக்கிறது. குடும்பம் என்ற இடத்தில்தான், ஒருவர் மற்றவரை அன்பு செய்யக் கற்றுக்கொள்கிறார். மனித வாழ்வில் இயற்கையாக அமையும் மையம் அது. அங்குதான் நமது ஆளுமை வளர்த்தெடுக்கப்படுகிறது. அத்தகைய நிலையில் நம்பிக்கையை அடுத்த தலைமுறைக்கு வழங்கக்கூடியவர்கள் நம் முன்னோர்கள்! அடுத்தத் தலைமுறைக்கு அதை வழங்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது. நம்பிக்கை என்பதுதான் அவர்கள் நமக்கு விட்டுச் செல்கின்ற உயர் மதிப்பு மிக்கச் சொத்து,

நம் குடும்பத்தில் நாம் மாளிகையாய் விளங்கலாம்; நம் குழந்தைகள் வைரக் கற்களாக மின்னலாம்; ஆனால், நம்மை அடையாளப்படுத்திய அடிக்கற்கள் மறைந்தே இருக்கின்றன.நம்மையும், நம் இளைய தலைமுறையையும் உலகுக்கு அடையாளப்படுத்திய அந்த அடிக்கற்களே, நாம் அடிதொழ வேண்டிய நம் குடும்பத்தின் பெரியோர்கள், முதியவர்கள், மூதாதையர்கள்.

அப்துல் ரகுமானின் வரிகள் நம்மைச் சிந்திக்கத் தூண்டட்டும்;

ஏற்றப்பட்ட விளக்குகளை விட

ஏற்றி வைத்த தீக்குச்சிகளே உயர்வானது!’

இத்தகைய தீச்சுடர்கள், ஞானப்பெட்டகங்கள் இனி நேசிக்கப்படட்டும்; மதிக்கப்படட்டும்; மாண்புடன் போற்றப்படட்டும்; அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படட்டும்; உள்ளன்புடன் பராமரிக்கப்படட்டும்!

அன்புத் தோழமையில்,

முதன்மை ஆசிரியர்

Comment