ஆசிரியர் பக்கம்
‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என்றார் ஒளவையார். ஆகவேதான் மாதா, பிதா, குரு-தெய்வம் எனப் பெற்றோருக்கு அடுத்த நிலையில் குருவை இறைவனுக்கு இணையாக வைத்துப் போற்றுகிறது இச்சமூகம். ஆயிரம் பணிகள் இந்த உலகை அலங்கரித்தாலும், ஆசிரியப் பணியே அனைத்திற்கும் ஆதாரம்; அடித்தளம். ஆசிரியப் பணிதான் அத்துணை பணிகளையும் பணியாளர்களையும் உருவாக்குகிறது. ‘ஆசிரியர்’ என்னும் ஒற்றைப் புள்ளியில்தான் இந்த உலகம் கல்வி வளர்ச்சியில், அறிவுத்தேடலில், ஒழுக்க மேன்மையில் மையம் கொண்டிருக்கிறது. ஆகவே, ஆசிரியர் என்னும் எழுதுகோலால்தான் மாணாக்கரின் வாழ்க்கை என்னும் பாடம் வரையப்படுகிறது; வார்க்கப்படுகிறது. நண்பனாய், தோழனாய், பெற்றோராய் உடனிருந்து, கரம்பிடித்து உடன் நடப்பவரே நம் மேன்மைமிகு ஆசிரியப் பெருமக்கள்!
‘வாழ்க்கை என்பது தன்னிடம் உள்ளதைப் பிறருக்குக் கொடுப்பதே!’ என்றார் பிரஞ்சு படைப்பாளி விக்டர் ஹயூக்கோ. பிறரை உயர்த்தி விடும் தியாக உள்ளம் ஒன்றுதான் மனித வாழ்வைப் பொருள் பொதிந்ததாக ஆக்குகிறது. ஆசிரியப் பணி என்பது சமூகநல மேம்பாட்டுக்காய் பெரும் அர்ப்பண உணர்வுடன் தம் வாழ்வைத் தியாகம் செய்யும் அறப்பணி! அது மாணாக்கரின் வாழ்வில் இருள் அகற்றி அக ஒளியேற்றும்; உயர ஏற்றி வைத்து அழகு பார்க்கும்; வளர்ச்சி கண்டு பெருமை கொள்ளும்; சாதனை கண்டு சலனம் இன்றிப் பூரிப்படையும்; ‘எதிர்காலம் என் கையில், அது சிறப்புற வேண்டும்’ என்ற உயர்ந்த நோக்கம் கொண்டு தன்னையே தியாகம் செய்யும்.
‘மனித குலத்தை எது ஒன்றுபடுத்துகிறதோ அதுவே மேலானது; அழகானது; சிறப்பானது’ என்றார் டால்ஸ்டாய். மனித குலத்தை ஒன்றுபடுத்தும் அன்பையும் ஒழுக்கத்தையும் மனிதநேயத்தையும் கற்றுத்தரும் கல்வியும் கல்விக் கூடமுமே மேலானவை; அழகானவை; சிறப்பானவை. அதன் உயிர்நாடியாய் விளங்கும் ஆசிரியரே உன்னதமானவர்கள்.
ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ஆம் நாள் இந்தியத் திருநாட்டின் மேனாள் குடியரசுத் தலைவர் பாரத இரத்னா டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக நாம் கொண்டாடுவது வாடிக்கை நிகழ்வாக அமையாமல், நமது வாழ்வின் வைகறை வானில் விடியல் விளக்கேற்றிய ஆதவனாய் அவர்கள் என்றும் கொண்டாடப்பட வேண்டும் என்ற சிந்தனையை உரக்கச் சொல்கிறது இந்த நாள். ஆசிரியர்கள் நமது வாழ்வில் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் அல்லர்; மாறாக, தலை வணங்கப் பட வேண்டியவர்கள் என்ற பேருண்மையை உணர்த்துகிறது இந்த நாள்!
தனித்தன்மையை அடையாளப்படுத்தி, இலக்கைக் கூர்மைப்படுத்தி, தடத்தைச் செம்மைப்படுத்தி, பயணத்தை ஊக்கப்படுத்தி வாழ்வில் வெற்றிக்கனியைச் சுவைக்கச் செய்பவர் ஆசிரியரே! ‘ஒரு நல்ல ஆசிரியரை அடைந்தவர் வாழ்வில் எல்லா வளங்களையும் அடைந்ததற்குச் சமம்’ என்கிறது முதுமொழி. அனைத்தையும் ஆக்க வல்ல கல்வியைத் தந்து, அகிலத்தையே அடையச் செய்யும் ஆக்கத்தின் திறவுகோலாய், பேராற்றலாய் நம்முள் செயல்படுபவர்களும் அவர்களே!
உரோமை சிஸ்டைன் தேவாலயத்தின் மேற்கூரையில் கீழ்நோக்கிக் கவிழ்ந்திருக்கும் விதானப் பரப்பில் உயிர் உள்ள ஓவியங்களைத் தீட்டிய மைக்கேல் ஏஞ்சலோவின் வாழ்க்கையே நம் நினைவுக்கு வருகிறது. திருத்தந்தை இரண்டாம் ஜூலியஸ் அவரை அழைத்து இப்பணியை ஒப்படைத்தபோது ‘நானோ!’ என்று அதிர்ந்து போன ஏஞ்சலோ, ‘நான் ஓவியன் அல்லன்; நான் ஒரு சிற்பி’ என்றார். அதற்குத் திருத்தந்தை, ‘உங்கள் ஆசிரியர் கிர்லாண்டையோ கற்றுத் தந்ததை நினைவில் கொண்டு பணியில் இறங்குங்கள்’ என்றார். தயங்கி நின்ற ஏஞ்சலோவின் செவிகளில் ஆசிரியரின் பெயர் கேட்டதும் விழிகளில் ஒளி பிறந்தது; உள்ளத்தில் நம்பிக்கை எழுந்தது; கரங்களில் ஓவியம் பிறந்தது; உலகமே பூரிப்படைந்தது. அவர் விழிகளில் வெற்றியின் வெளிச்சம் வீசிடக் காரணமானது அந்த ஆசிரியரே! ஆசிரியர் வாழ்வும் வாழ்வியல் தத்துவமும், ‘உன்னால் முடியும்’ என்ற தாரக மந்திரமும் ஏஞ்சலோவைப் பெரும் ஓவியராக உலகிற்கு அடையாளப்படுத்தியது. திருவிவிலியத்தில் விரவிக் கிடக்கும் படைப்பின் காட்சிகளைச் சிஸ்டைன் தேவாலயத்தின் விதானத்தில் விரிந்து கிடக்கச் செய்து தலை சிறந்த கலைப்படைப்பைத் தந்தார் ஏஞ்சலோ. இத்தாலியின் தலை சிறந்த ஓவியராக விளங்கிய இரஃபேல், ஏஞ்சலோவின் கைவன்மையைக் கண்டு மெய்சிலிர்த்து மண்டியிட்டார் என்பது வரலாறு.
வரலாற்றுப் பக்கங்களில் நிகழ்வுகளாக மட்டுமல்லாமல், இன்றும் ஆசிரியர்களின் ஆக்கமும் தாக்கமும் மாணாக்கர் வாழ்வில் தனிச் சிறப்பு கொண்டிருக்கிறது என்பதே உண்மை. ஆகவே, ஆசிரியர்-மாணாக்கர் உறவு என்பது உன்னதமானதாக, போற்றத்தக்கதாக, புனிதமிக்கதாக இருக்க வேண்டும். மாண்புமிகு ஆசிரியர்களை மாதிரிகளாகக் கொண்ட மாணாக்கர் மத்தியில் சில ஆசிரியர்களின் வரம்பு மீறிய செயல்பாடுகளையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கண்டிப்பு என்ற பெயரில் மாணாக்கர்மீது கடுமையான தண்டனை, சாதியம், மனஉளைச்சல், பாலியல் குற்றங்கள் ஆகியவை தவிர்க்கப் பட வேண்டும்; குற்றம் புரிந்தோர் தண்டிக்கப்பட வேண்டும்.
மறுமுனையில், நல்லாசிரியர்களாய் நல்மனம் கொண்டோராய் வாழ்க்கையைத் திறம்பட அமைத்துக் கொண்டு சிறப்புறப் பணியாற்றுவோர் கொண்டாடப்பட வேண்டும். கல்விக்கண் திறந்து இருளகற்றும் இந்த ஆதவன்(கள்) வணங்கப்பட வேண்டும்; அவர்களின் தனித்துவமான பணிகள் அடையாளப்படுத்தப்பட வேண்டும்; சாதனைகள் படைக்கும் மாணாக்கரின் அறிவுத் தூணாய் விளங்கும் ஆளுமைகள் பாராட்டப்பட வேண்டும். ஒட்டுமொத்தத்தில், ஆசிரியர் பணி மேன்மையுடன் நோக்கப்பட வேண்டும்; ஆசிரியர்கள் மாண்புடன் போற்றப்பட வேண்டும். அவர்கள் பணி நிறைவு பெறும் காலத்தில் பேரன்புடன் காக்கப்பட வேண்டும். இன்றைய இளம் சமுதாயத்திற்கும் நாளைய சமூகத்திற்கும் விடியல் தரும் இந்தச் சூரியன்(கள்) இன்றைய காலச்சக்கரத்தில் தமிழ்நாட்டில் ‘விடியல் தரும் சூரியன்’ ஆட்சியில் பல கோரிக்கைகளை முன்வைத்தும் அவர்கள் தங்கள் வாழ்வில் விடியல் காணாதிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
“ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்” எனத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது இன்றும் பேசுபொருளாக்கப்படவில்லையே என்பதும், ஆசிரியர்களின் பல சலுகைகள் மறுக்கப்பட்டு வருவதும் பெரும் ஆதங்கமாகவே இருக்கின்றன. புதிய கல்விக்கொள்கை, ஆசிரியர் தகுதித் தேர்வு, பணி நியமன விதிமுறைகள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நியமனம், பதவி உயர்வு எனப் பல சூழ்நிலைகளில் இன்றைய ஆசிரியர்கள், குறிப்பாக சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் சந்திக்கும் சவால்கள் ஏராளம். விடியல் அரசு இவர்கள் வாழ்விலும் விடியல் தர வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!
இன்றைய நாளில் இந்திய, தமிழ்நாடு அரசின் தேசிய மற்றும் மாநில நல்லாசிரியர் விருது பெரும் ஆசிரியப் பெருமக்களை மனதார வாழ்த்துகிறோம். ஆசிரியர்களின் அறப்பணியைப் போற்றுவோம்! அவர்களை என்றும் கொண்டாடுவோம்! அவர்களை மாண்புடன் பேணுவோம்!
அன்புத் தோழமையில்,
முதன்மை ஆசிரியர்
Comment