No icon

உலகமே உற்றுநோக்கும் அமெரிக்கத் தேர்தல்!

உலகின் மிக உயர்ந்த, சக்தி வாய்ந்த பதவியாகக் கருதப்படும் அமெரிக்க நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சி வேட்பாளராகவும், இந்திய உறவுமுறை வழிவந்த தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் சனநாயகக் கட்சி வேட்பாளராகவும் இந்தத் தேர்தலில் களம் காண்கின்றனர்.

உலகின் மிகப் பழமையான சனநாயக நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் அதிபர் பதவியில் இருக்கும் நபருக்கு, தங்கள் நாட்டிலும் உலக அளவிலும் பல அதிகாரங்கள் குவிந்து கிடக்கின்றன. தங்கள் நாட்டின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், மருத்துவம், காலநிலை மாற்றம், தேசியப் பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் எனப் பல முக்கியத் துறைகளில் நாட்டை வழிநடத்துவதோடு, இத்துறைகளில் உலகளாவிய பங்களிப்புச் செய்யும் பொறுப்பாகவும் அது பார்க்கப்படுகிறது.

அதிபர் பொறுப்பில் இருக்கும் நபர் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும், கையொப்பமிடும் முன்னெடுப்புகளும், மற்ற நாடுகளுடன் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு ஒப்பந்தங்களும் பல கோடி அமெரிக்கர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடியவை. மேலும், அமெரிக்கா உலக வல்லரசு நாடாக இருப்பதால், அமெரிக்காவில் நடக்கும் ஒவ்வொரு பொருளாதார வர்த்தக மாற்றங்களும் முன்னெடுப்புகளும் புதிய சிந்தனைகளும் உலகமெங்கும் எதிரொலிக்கக் கூடியவை.

அமெரிக்காவின் அடுத்த நான்கு ஆண்டு காலம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பைத் தீர்மானிக்கும் தேர்தல்தான் இந்த அதிபர் தேர்தல். எனவே, இது அமெரிக்காவையும் தாண்டி, எப்போதும் சர்வதேச அளவில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியதாகவே கணிக்கப்படுகிறது. காரணம், அமெரிக்கப் பொருளாதாரத்தில் அதிபர் எடுக்கும் முடிவுகள் மிகவும் முக்கியமானவை. மேலும், அதிபராக இருப்பவர் அமெரிக்காவின் பிரதிநிதியாகவே உலக நாடுகளுக்கிடையே அடையாளப்படுத்தப்படுகிறார்.

இந்தத் தேர்தலைப் பொறுத்தமட்டில் பல கருத்துக் கணிப்புகள் முன்வைக்கப்படுகின்றன. தேர்தல் பரப்புரையின் போது நடத்தப்பட்ட படுகொலை முயற்சியில் இருந்து டொனால்ட் டிரம்ப் நூலிழையில் உயிர் தப்பியதால் அவருக்கு அனுதாப அலைகள் வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் எனப் பேசப்படுகிறது; ஆயினும், அமெரிக்கத் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண், முதல் கறுப்பினத்தவர், முதல் ஆசிய-அமெரிக்கர் என்ற சாதனைகளைப் படைத்திருப்பவர் கமலா ஹாரிஸ். ஆகவே, பல நூற்றாண்டு கால அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் அதிபர், அதிலும் முதல் கறுப்பினப் பெண் அதிபர், முதல் ஆசிய-இந்திய உறவுமுறை வழிவந்த அதிபர் (கமலா ஹாரிஸின் தாய் இந்தியாவை, குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்; தந்தை ஜமைக்கா நாட்டவர். இவர்கள் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தவர்கள்) போன்ற பல்வேறு சாதகமான சூழல்களைக் கொண்டிருப்பதால் கமலா ஹாரிசுக்கு இவை வெற்றிக்கான கூடுதல் சாத்தியக் கூறுகள் எனக் கணிக்கப்படுகின்றன.

இந்தத் தேர்தல் தொடர்பாக பல ஊடகங்களும், ஆய்வு அமைப்புகளும் மேற்கொண்ட கருத்துக்கணிப்புகள் அனைத்துமே தொடக்கத்திலிருந்து வெற்றி வாய்ப்பு கமலா ஹாரிஸ் பக்கம் இருப்பதாகவே தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் செய்தி ஒளிபரப்பு முன்னணி தொலைக்காட்சி நிறுவனம்.பி.சி. நியூஸ்மற்றும்இப்சாஸ்’ (IPSAS - International Public Sector Accounting Standards) நிறுவனமும் நடத்திய கருத்துக்கணிப்பில் 50 விழுக்காட்டினர் கமலா ஹாரிசையும், 46 விழுக்காட்டினர் மட்டுமே டிரம்பையும் ஆதரிப்பதாகக் கருத்து வெளியிட்டிருக்கின்றன.

அவ்வாறே, CBS நியூஸ், CNN மற்றும் FOX நியூஸ் உள்ளிட்ட செய்தி நிறுவனங்களும் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் எனத் தெரிவிக்கின்றன. CNBC 54%, CNN 53%, ABC செய்தி நியூஸ் 49% கமலா  ஹாரிஸ் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கின்றன. ஆயினும், பல்வேறு ஊடகங்கள் மேற்கொண்ட ஆய்வுகளிலும் கருத்துக்கணிப்புகளிலும் இருவருக்கும் இடையேயான இடைவெளி மிகச் சிறிதளவு எனவும், எனவே, வெற்றியைத் தீர்மானிக்கவிருப்பது நடுநிலையாளர்கள் எனவும் குறிப்பிடுகின்றன.

கமலா ஹாரிஸின் சனநாயகக் கட்சி உறுப்பினர்கள், பன்முகத்தன்மையை ஆதரிப்போர், கல்லூரி பட்டதாரிகள் இவர்கள் அதிகம் வாழக்கூடிய பகுதி பெரும் நகரங்கள். இந்நகர மக்கள் அவர் பக்கம் இருக்கிறார்கள். மறுபக்கம், மத உணர்வும், நிற சகிப்புத்தன்மை இல்லாத வெள்ளை இன உழைக்கும் மக்கள் அதிகம் வாழும் கிராமப்புறங்களை உள்ளடக்கிய மாகாணங்கள் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக இருக்கின்றன எனக் கருத்துக் கணிப்பு வெளிப்படுத்துகிறது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களாலும், சட்ட விரோதமாகக் குடியேறிய நபர்களாலும் அமெரிக்கப் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அமெரிக்க மக்களுக்கு வேலையின்மை ஏற்படுவதாகவும் டிரம்ப் தனது பரப்புரையில் கருத்துகளை முன்வைக்கிறார். தான் நடுத்தரப் பொருளாதாரப் பின்புலத்தில் இருந்து வருவதாகவும், தன்னைத் தேர்ந்தெடுத்தால் அமெரிக்காவின் வர்த்தகம், பொருளாதார மேம்பாடு அடித்தட்டில் இருந்து நோக்கப்படும் எனவும், அவர்கள் வளர்ச்சிக்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் கமலா ஹாரிஸ் தனது பரப்புரையை முன்வைக்கிறார்.

ஆயினும், அமெரிக்கப் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, கருக்கலைப்பு, சட்டவிரோதக் குடியேற்றம் ஆகிய கருத்துகளில் இந்த வேட்பாளர்களின் நிலைப்பாடு, அவர்கள் கட்சியின் அணுகுமுறை ஆகியவை தேர்தல் முடிவிற்கு முக்கியக் காரணிகளாகக் கருதப்படுகின்றன. இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி போட்டியிடும் அதிபர் வேட்பாளர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற விவாதத்தில் டிரம்பைக் காட்டிலும் கமலா ஹாரிஸ் சிறப்பாகச் செயல்பட்டதாக அமெரிக்க அரசியல் பகுப்பாய்வு நிறுவனமானபாலி மார்க்கெட்தெரிவித்திருக்கிறது. விவாதத்தைக் கைக்கொள்ளும் விதம், கருத்துகளை முன்வைக்கும் முறை, தன் வாதத்தைத் தெளிவுற விளக்கும் விதம், நிதானத்துடன் எதிர் வேட்பாளரின் கேள்வியைக் கையாளும் விதம், பரந்த தொலைநோக்குப் பார்வையுடன் முன்வைக்கப்படும்  திட்டங்கள் ஆகியவை அதிபரைத் தேர்ந்தெடுக்க மக்கள் மேற்கொள்ளும் அளவுகோல்களாகப் பார்க்கப்படுகின்றன.

அத்தகைய வகையில், கமலா ஹாரிஸ் இந்த முதல் விவாதத்தை நேர்மறையாகக் கைக்கொண்டதாகவும், மிகவும் நிதானமாகவும் பொறுமையோடும் பேசியதால் மக்கள் மனங்களில் அவர் இருப்பார் எனவும், தேர்தலில் இதுபோன்ற கடும் போட்டி நிலவும்போது கோபப்படும் தலைவரை மக்கள் விரும்புவதில்லை எனவும் அமெரிக்க அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

கமலா ஹாரிசுக்குக் கிடைக்கும் இந்த நேர்மறை எண்ணங்களுடன், ஒரு பெண் அமெரிக்காவை ஆள வேண்டும் எனப் பெண்ணியக் கருத்தியல் கொண்டவர்களும், ‘பெண் வாக்கு ஒரு பெண்ணுக்குஎன ஆதரவு தரும் பெண்ணிய அமைப்புகளும் கமலா ஹாரிசுக்கு வெற்றி வாய்ப்பை உறுதி செய்கின்றன.

இத்தகைய சூழலில், டொனால்ட் டிரம்ப்பின் மனைவி மெலானியாவே கமலா ஹாரிஸ்தான் வெல்ல வேண்டும் என்று நினைப்பதாகக் கருத்து தெரிவித்திருக்கிறார் வெள்ளை மாளிகையின் முன்னாள் தகவல் தொடர்பு செயலாளர் அந்தோணி இஸ்காரமுச்சி. அவ்வாறே குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் ஜே.டி. வான்ஸ், கமலா ஹாரிஸின் குழந்தை பாக்கியம் பற்றி விமர்சித்த கருத்து பல்வேறு அரசியல் தலைவர்கள், பெண்ணியவாதிகள், சமூகச் செயல்பாட்டாளர்கள்ஊடகப் பிரபலங்கள் எனப் பலரையும் கமலா ஹாரிஸ் பக்கம் நிலைப்பாடு எடுக்கச் செய்திருக்கிறது.

மேலும், ஒபாமா, அதிபர் ஜோ பைடன் மற்றும் இரஷ்ய அதிபர் புடின் உள்ளிட்ட பலருடைய ஆதரவு கமலா ஹாரிசுக்கு இருக்கும் நிலையில், அவருக்கான வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவே பலரும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

ஒபாமாவைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்பினப் பெண் அதிபராக  ஆவதும், அதுவும் முதல் பெண் அதிபராக இருப்பதும், அவர் இந்தியா-தமிழ்நாடு உறவு வழிமுறை வந்தவர் என்பதும் நமக்குப் பெருமைதானே! அவர் வெற்றி பெற வாழ்த்துவோம்!

அன்புத் தோழமையில்,

முதன்மை ஆசிரியர்

Comment