No icon

அம்மா... நீ தந்த செபமாலை!

அம்மாஎன்றதுமே ஆயிரம் உணர்வுகள் எழுகின்றன நம் எண்ணத்திலும் உள்ளத்திலும். தாய்க்கு, அவள் தாய்மைக்கென்று தனிப்பெரும் ஆற்றல் உண்டு. தளிரை வளர்த்து, தரணியைத் தழைக்கச் செய்பவள் அவளே! அன்னை மரியாவின் பெருமையைக்கூறும்அருள்நிறை மரியம்மை காவியத்தில்கவிஞர் துரை. மாலிறையன்...

தாயெனில் பற்று உண்டு;

தனிப்பெரும் பரிவு உண்டு!

தோயும் வாய்மை உண்டு;

தொடர்வலி வளர்ச்சி உண்டு!

தூயவர் தோற்றம் உண்டு;

துறக்கமும் அருகில் உண்டு!

நேயமும் நெகிழ்வும் உண்டு;

நிலைத்த எப்பேறும் உண்டு!’ என்கிறார்.

அன்னையின் சிறப்பே நிலையான பேற்றினை வழங்குவதே! அந்த அன்னையில் பாத்திமா திருக்காட்சியைக் குறிப்பிடும் அவர்,

இருகைகள் குருசைப் போல இருக்கவும்

வலக்கை தன்னில் திருச்செபமாலை முத்துத்திகழவும்

வெண்மையான உருச்சுடர் அங்கி ஆடைஓரத்தில்

தங்கத்தோடும் திருத்தலை முக்காட்டோடும்

தெரிந்தனர் அம்மையாரே!”

என்று குறிப்பிடுகிறார். அந்த அன்னை தந்த திருச்செபமாலை ஆயிரமாயிரம் அருள்வரங்கள் பெற்றுத்தரும் அருளின் வாய்க்கால். ஆகவே, அன்றாடம் திருச்செபமாலை செபிக்க அழைக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். “இது நம் இதயத்தின் செபம்என்றும், “நம் வாழ்வோடு இணைந்த செபம்என்றும், “இதுவே எளியோரின் மற்றும் புனிதர்களின் செபம்என்றும் குறிப்பிடும் அவர், “எல்லாரும் குறிப்பாக நோயுற்றோர் தங்களின் துயர வேதனைகளில் அன்னையின் அரவணைப்பைப் பெற அவரிடம் அண்டிவர அழைக்கிறார்.

தாய்மையின் அளப்பரிய செயல்களை விண்ணகத்தில் தொடரும் நம் அன்னை மரியாவை மகிமைப்படுத்த 9-ஆம் நூற்றாண்டில் பெனடிக்ட் துறவற சபையினரால் தொடங்கப்பட்டு, பின்பு தொமினிக்கன் சபையினரால் உலகெங்கும் பரப்பப்பட்ட பக்தி முயற்சிதான் இந்தச் செபமாலை செபிக்கும் முறை. இப்பக்தி முயற்சியை யாவரும் பின்பற்ற திரு அவை வழிகாட்டியபோதும், அன்னை மரியாவே மே 13, 1917 அன்று பாத்திமா நகரில் காட்சி தந்துஉலக அமைதிக்காகவும், உலகில் போர்கள் முடிவடையவும்செபிக்க நம்மை அழைக்கிறார்.

அருள் வரங்களைப் பெற்றுத்தரும் இப்பக்தி முயற்சிநற்செய்தியை முழுமையாகத் தியானிக்கும் செயல்என்கிறார் திருத்தந்தை புனித ஆறாம் பவுல். “அன்னை மரியாவையும், அவரின் அன்பு மகன் இயேசுவையும் ஒருசேர மகிமைப்படுத்தும் இப்பக்தி முயற்சிதாய் - சேய்தியான முறைமைக்கு வழிகாட்டுகிறது! இப்பக்தி முயற்சி, தீமையின் ஆதிக்கத்திலிருந்து நாம் வெற்றி கொள்ள வழிகாட்டும் ஆன்மிகக் கருவி (Spiritual Weapon) என்கிறார் திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல்.

இத்தகைய செபமாலை பக்தி முயற்சியை மக்கள் உள்ளங்களில் வளர்த்து, அண்டி வரும் மக்களுக்கு அருள் வரங்களைப் பெற்றுத்தரும் அருள்தலமாக விளங்கும் கோவை மறைமாவட்டம், கருமத்தம்பட்டி பங்கு, தூய செபமாலை அன்னை பசிலிக்காவின் 384-ஆம் ஆண்டுப் பெருவிழாவைச் சிறப்பிக்கும் வண்ணம் வெளிவருகிறது இச்சிறப்பிதழ். இவ்விதழ் வெளிவர பேருதவியாக இருந்த திருத்தல நிர்வாகத்தினரைப் பாராட்டுகிறேன்!

அன்னையின் அருள்தலம் கூடிடுவோம்!

அவர் திருப்புகழ் பாடிடுவோம்!

அருள் வரங்கள் பெற்றிடுவோம்!

அன்புத் தோழமையில்,

முதன்மை ஆசிரியர்

Comment