No icon

உள்ளாட்சியே நல்லாட்சி

மூன்றடுக்கு முறையிலான இந்திய ஆட்சியமைப்பின் அடித்தளமாக இருப்பது நமது பஞ்சாயத்து ஆட்சிமுறையே. தமிழகத்தைப் பொருத்தவரை பஞ்சாயத்து அமைப்புகள் என்றழைக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல், மாநில அரசின் அக்கறையின்மையால் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் இன்றுவரை  நடத்தப்படாமல் உள்ளது. திமுக தொடர்ந்த நீதிமன்ற வழக்கைக் காரணம் காட்டியே மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் தள்ளிவைத்துக்கொண்டே வந்திருக்கிறது. நவம்பர் 17, 2017 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும்  வார்டு மறு வரையறை... என்று சொல்லியே காலம் தாழ்த்திவிட்டனர்.  கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சிறப்பு அதிகாரிகளை நியமித்து அவர்கள் மூலமாக ஆட்சிப்பணியைச் செயல்படுத்தி வருகிறது. அண்மைக் காலமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான அடிப்படைப் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் முடக்கிவிட்டுள்ளது.  
இதன்படி12524 கிராம ஊராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியம், 31 மாவட்ட ஊராட்சி என கிராமப்புறங்களில் 12943 பதவிகளுக்கும், 1,01,450 உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.  நகர்ப்புறங்களில் 12 மாநகராட்சி, 124 நகராட்சி, 528 பேரூராட்சி என்று 664 தலைவர் பதவிகளுக்கும், 12,820 உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. எந்நேரம் வேண்டுமானாலும் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவரலாம்.
தற்போது எத்தனை வாக்காளர்களுக்கு வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட வேண்டும் என்ற அறிவிக்கை தமிழ்நாடு அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்
கான வாக்காளர் பட்டியல் தயாரிக்க அரசாணை யைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து  ஜூன் மாத இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தல், 22
தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் என்பதைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் என்பது மக்கள் அதிகாரத்திற்கான தேர்தலாக அமைகிறது.  
கிறிஸ்தவர்களைப் பொருத்தவரை இதுநாள் வரை அரசியலில் கிள்ளுக்கீரையாக கருதப்பட்டவர்கள், அண்மையில் நடந்து முடிந்து மக்களவைத்தேர்தலில் தமிழக ஆயர்
பேரவை மற்றும் கிறித்தவ வாழ்வுரிமை இயக்கத்தின் வழிகாட்டுதலில் தாங்கள் யார் என்பதை நிரூபித்துள்ளனர். தமிழகத்தைப் பொருத்தவரை திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுமே இஸ்லாமிய சிறுபான்மையினருக்குக் கொடுக்கும் அரசியல் முக்கியத்துவத்தை கிறிஸ்தவச் சிறுபான்மையினருக்குத் தருவதில்லை. அவர்களை சட்டப்பேரவைத் தேர்தலிலும் மக்களவைத் தேர்தலிலும் வேட்பாளர்களாக அறிவித்து, தங்கள் ஆதரவை நிலைநாட்டுவதில்லை. கறுப்புப் பணப் புழக்கம் இல்லாமல், எதிலும் நேர்மையாக செயல்படும் கிறிஸ்தவச் சிறுபான்மையினரை வாக்கு வங்கியாகவே திராவிடக் கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன. 
எனவே நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல், கிறிஸ்தவர்கள் தாங்கள் யார் என்பதை நிரூபிப்பதற்கான களம். அடிமட்ட நிலையிலிருந்து மேல் நோக்கி வளரும் அரசியல் களத்திற்கு அச்சாரமிட இத்தேர்தல் கிறிஸ்தவருக்குப் பயன்பட வேண்டும்.  உள்ளாட்சி தேர்தலில் கட்சி அரசியலின் கை மேலோங்கியிருந்தாலும், இயக்க அரசியலை முன்வைக்கும் கிறிஸ்தவர்கள், இயங்க வேண்டிய களம் இந்த உள்ளாட்சித் தேர்தல் ஆகும். இனியும் நாம் விழித்தெழாவிட்டால் நமக்கு நாமே சவக்குழி வெட்டிக்கொள்ளும் நிலையே வரும்.  இதுநாள் வரை, யாரைத் தோற்கடிக்க கைக்கோர்த்தோமோ, இனி, நம்மை நாமே வெற்றிப்பெற வைக்க கைக்கோர்க்க வேண்டும்.  அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொடங்கி கும்மிடிப்பூண்டிவரை கிறிஸ்தவர்களிடம் காணப்பட்ட எழுச்சியை இப்பஞ்சாயத்து தேர்தலில் நாம் அறுவடை செய்ய வேண்டும். 
வார்டு அளவில் அன்பியங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரு நல்ல பொதுநலமிக்க கிறிஸ்தவ வேட்பாளரை நிறுத்த வேண்டும். அதற்குப் பங்குத்தந்தையர்கள் ஆவண செய்ய வேண்டும். அவர் எல்லாருடைய அபிமானத்திற்கும் உரியவராக, சமயம் கடந்து, அரசியல் அறத்தை முன்னிலைப்படுத்துபவராக இருக்க வேண்டும்.  மக்களின் அடிப்படைத் தேவைகளான மின்சாரம், சுகாதாரம், குடிநீர் உள்ளிட்டவற்றிற்கு உரிமைக்குரல் எழுப்பி, இந்திய ஜனநாயகத்திற்கு உயிர்மூச்சு அளிக்கும் அமைப்பாக பஞ்சாயத்து அமைப்பு உள்ளது என்பதைப் புரிந்து கொண்டு இளைஞர் இளம் பெண்களுக்கு ஊக்கம் தர வேண்டும். வருங்காலத் தலைமுறைக்கு வாய்ப்புத் தர வேண்டும். 
அரசியல் கட்சி சார்பில் ஒரு கிறிஸ்தவ வேட்பாளர் நிறுத்தப்பட்டால்.. அவரையும் பரிசீலித்து அன்பிய அளவில் நல்ல முடிவெடுத்து ஊக்கப்படுத்த வேண்டும்.  அரசியல் கட்சிகள் உள்ளாட்சி அமைப்புகளிலும் ஆதிக்கம் செலுத்துகிற இக்காலக் கட்டத்தில் பஞ்சாயத்து அமைப்பில் கிறிஸ்தவத் தலைவர்களையும் தலைவிகளையும் அடையாளம் காணும் மிகப்பெரிய பொறுப்பு கிறிஸ்தவச்
சமூகத்திற்கு உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான அதிகாரத்தைப் பரவலாக்குவதும் அங்கீகரிப்பதும் காலத்தின் கட்டாயமாக உள்ளது. தற்போதுள்ள கிராமப் பஞ்சாயத்துகள், நகர சபைகள், மாநகர மன்றங்களில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு உறுதிசெய்யப்பட்டுள்ளது என்பதையும் நாம் அறிவோம்.
எனவே நடைபெறவுள்ள பஞ்சாயத்து தேர்தல் கிறிஸ்தவர்கள் தங்கள் அரசியல் பலத்தை நிரூபிப்பதற்கும் சோதிப்பதற்குமான தேர்தலாகக் கருதி, சாதியப் பிடிமானங்களைத் தகர்த்து, கிறிஸ்தவர்களை தனிப் பஞ்சாயத்திலும் பெண்கள் பஞ்சாயத்திலும் அடையாளம் கண்டு வெற்றிப் பெற செய்து, அரசியலில் புதியப் பரிமாணத்தை எட்டிப் பிடிப்போம். அரசியலில் கிறிஸ்தவர் நாம் வெல்லாவிட்டால் அரசியல் நம்மை வென்றுவிடும். தமிழக ஆயர்பேரவையும் கிறித்தவ வாழ்வுரிமை இயக்கமும் இதற்கு வழிகாட்ட வேண்டும்.

Comment