No icon

அட்டக்கத்திகளின் அடாவடியும் வெட்டுக்கத்திகளின் வீராவேசமும்

பதினேழாவது மக்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்கள் பதவிப்பிரமாண உறுதிமொழியை கடந்த வாரம் எடுத்துக்கொண்டனர். அவ்வமயம் நடைபெற்ற கேலிக்கூத்துகள்தான் மக்களவையின் மாண்பைக் குழி தோண்டி புதைக்குமளவுக்கு உள்ளன. 
தன்னுடைய ஆன்மிக குரு சுவாமி பூர்ண சேதானந்த் அத்வேஷானந்தகிரியின் பெயரைத் தனக்கு முன்னால் சேர்த்துக்கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்ட உத்தரப்பிரதேசத்தின் சாத்வி பிரக்யா தாக்கூர், முன்னெப்போதும் இல்லாத நடைமுறையாக, மூன்றுமுறை வேத மந்திரம் ஓதுவதைப்போல பதவிப் பிரமாண உறுதிமொழியை எடுத்துக்கொண்டார். 
உன்னாவ்’ தொகுதி மக்களவை உறுப்பினர் சாக்‌ஷி மஹராஜ் பதவி ஏற்று முடித்ததும், பாரதிய ஜனதா எம்.பி-க்கள் சிலர் ‘மந்திர் வஹான் பனாயேங்கே’ (ராமர் கோயில் அந்த இடத்திலேயே கட்டப்படும்) எனக் கோஷம் எழுப்பினர். பாரதிய ஜனதா எம்.பி-க்கள் வேறு சிலர், உறுதிமொழி ஏற்றுக்கொண்ட பிறகு ‘ஜெய் ஸ்ரீராம்‘ என உரக்க முழக்கமிட்டுச் சென்றனர். மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா எம்.பி லாக்கெட் சட்டர்ஜி, ‘ஜெய் ஸ்ரீராம், ஜெய் மாகாளி, ஜெய் துர்கா, ஜெய் பங்களா’ என்று கொக்கரித்தார்.  நடிகை ஹேமமாலினி, “ராதே! ராதே... கிருஷ்ணம் வந்தே ஜகத் குரு!” என்று கூறி, உறுதிமொழி எடுத்துக்கொண்டார். தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் எதையும் கண்டுகொள்ளாமல்”தேமே” என்று இருந்தார். 
இரண்டாம்நாள் பதவிப் பிரமாணக் காட்சிகள் முழுவதுமாக மதம், மொழி, கடவுள் என அத்தனையையும் அடையாளப் படுத்துவதாகவே அமைந்தன. எல்லாரும் ஏதோ சொல்லும்போது தான், தாங்களும் ‘ஏதாவது சொல்லியே ஆக வேண்டும்‘ என்ற சூழலில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மாலா ராய் ‘மம்தா பனர்ஜி ஜிந்தாபாத்’ எனச் சொல்லிமுடித்தார். திரிணாமுல் காங்கிரஸின் மூத்த எம்.பி கலிலூர் ரஹ்மான் பதவியேற்றபோது ஒட்டுமொத்தமாக ‘ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கீ ஜே!’ என கோஷம் போடத் தொடங்கினார்கள். ஹைதராபாத்தின் முஸ்லீம் கட்சித் தலைவர்  ஒவைஸி, பதவியேற்க வந்தபோது, அவர் முஸ்லீம் என்பதற்காகவே அவர் முன்பு ‘ஜெய் ஸ்ரீராம்‘ என பி.ஜே.பி எம்.பி-க்கள் உரக்கக் கத்தியது, பார்ப்போர் அனைவரையும் எரிச்சலூட்டியது.  இறுதியில் அவர்  “ஜெய்பீம்... தக்பீர் அல்லாஹூ அக்பர்” எனத் தெரிவித்து தன் பதவியேற்பை முடித்துக்கொண்டார். சோனியா காந்தி பதவியேற்க வரும்போது ‘பாரத் மாதா கீ ஜே’ என உரக்கக் கத்திய பாரதிய ஜனதா கட்சியினர், அவர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டதும், “நீங்கள் இந்தியில் உறுதிமொழி ஏற்றதுக்கு நன்றி!” என்றார்கள். ரவி கிஷன் எம்.பி, ‘தாய்மொழியான போஜ்புரியில் பதவியேற்கலாமா?’ எனக் கேட்டபோது, வாய்ப்பு மறுக்கப்பட்டது. 
சமாஜ்வாடி கட்சியின் ஷஃபிகுர் ரஹ்மான் ’உங்கள் வந்தே மாதரத்தை எங்களால் பின்பற்ற முடியாது.’ எனக் கோபமாகக் கூறிவிட்டு, உறுதிமொழியை முடித்துக்கொண்டார். மேற்கு வங்கத்தின் காகோலி கோஷ் என்கிற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி, “ஜெய் ஸ்ரீராம்” கோஷத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக “ஜெய் மாகாளி... ஜெய் மாகாளி...” எனப் பாரதிய ஜனதா கட்சியினரைப் பார்த்து உரக்கத் கத்திவிட்டு, தன்னுடைய பதவியேற்பைத் தொடங்கினார். 
தமிழகத்தின் ஓ.பி.ரவீந்தரநாத் குமார் தவிர அத்தனை எம்.பி-க்களுமே ”வாழ்க தமிழ்!” என்று தங்களின் உறுதிமொழியை முடித்துக்கொண்டார்கள். தி.மு.க.வின் கனிமொழி, “வாழ்க பெரியார்!” என்றார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “வாழ்க பெரியார்! வாழ்க அம்பேத்கர்... வாழ்க ஜனநாயகம்!” என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன், “மார்க்சியம் வாழ்க” என்றார். ஒருகட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியினருக்கான எதிர்வினையாகத் தொடங்கியது, தர்மபுரி எம்.பி செந்தில்குமார் பேசுகையில் மடைமாற்றம் கண்டிருந்தது. “கலைஞர் கருணாநிதி வாழ்க!” என்று தன்னுடைய உரையை முடித்தார் அவர். 
முதல்நாளன்றே அட்டக்கத்திகளின் அலப்பறை களும் அட்டகாசங்களும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.  பதவியேற்கிறபோதே ஆடுகிற உச்சிக்குடுமி இன்னும் போக போக என்னச் செய்யுமோ? என்ற அச்சம் ஜனநாயக வாதிகளிடம் எழுந்துள்ளது உண்மையே. 
தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்களின் ஆணவமிக்க, மதச்சார்புமிக்க, பிரித்தாளும் கொள்கை யுடைய, இந்திமொழியாதிக்க, இந்துத்துவ கோஷங்களின் எதிர்விளைவே ஜெய்காளியும், ஜெய் பீம்மும், வாழ்க பெரியாரும், வாழ்க மார்க்சியமும்..தக்பீர் அல்லாஹூ அக்பரும் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். 17வது மக்களவையின் சபாநாயகராக பொறுப்பேற்ற ஓம் பிர்லாவின் வார்த்தைகள்தான் நம்பிக்கையை நம்மிடம் விதைக்கின்றன. அவர் “இந்த விஷயத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோயில். இந்தக் கோயில், நாடாளுமன்ற விதிகளின்படி செயல்படும். இந்த இடத்தின் நன்மதிப்பை உணர்ந்து செயல்பட அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு நம்முடையது. உலகம் நம்மைக் கவனிக்கிறது. நமது நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். நாடாளுமன்றம், மத ரீதியான முழக்கங்களை முன்வைக்கும் இடம் கிடையாது. பதாகைகளை ஏந்தும் இடம் கிடையாது. அதற்கான இடங்கள் பல இருக்கின்றன. உறுப்பினர் என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லலாம். என்ன குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அது இங்கு விவாதிக்கப்படும். அரசின் திட்டங்களை விமர்சிக்கலாம். ஆனால், இங்கு வந்து மத ரீதியான முழக்கங்கள் செய்ய வேண்டாம். 
இதுதான் இன்றையத் தேவை. உங்கள் மதங்களையும் சாதிகளையும் மொழிப்பற்றையும் ஓரமாய் வைத்துவிட்டு, மக்கள் பிரச்சினைகளுக்காகப் பேசுங்கள். இது மக்கள் அவை. மாக்களின் அவை அல்ல.  அட்டக்கத்திகளே! அடக்கி வாசியுங்கள். வெட்டுக் கத்திகளே! விலை போகாதீர்கள். சாத்விகளே! யோகிகளே! மக்களவையில் பூஜை செய்யாதீர்கள்!

Comment