No icon

தலையங்கம்

யோக்கியர்கள் ஜாக்கிரதை

உச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக இருந்து, அண்மையில் - நவம்பர் மாதத்தில் - ஓய்வுபெற்ற ரஞ்சன் கோகாயை, இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மாநிலங்களவையின் நியமன உறுப்பினர் பதவிக்குப் பரிந்துரைத்தார். குடியரசுத் தலைவரின் இந்நியமனத் திற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் அவரை மார்ச் 19 ஆம் தேதி காலை 11 மணிக்கு மாநிலங்களவை உறுப்பினராக, அவைத்தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடுபதவி பிரமானம் செய்து வைத்தார். இதை ஏற்காத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்திய அரசு மற்றும் ரஞ்சன் கோகாய்க்கு எதிராகக் கோஷமிட்டு வெளிநடப்புச் செய்தனர். நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக மாநிலங்களவை உறுப்பினராக ஒருவர் பதவியேற்றபோது எதிர்க் கட்சியினர் வெளிநடப்புச் செய்தது இதுவே முதல் முறை.

இவரது பதவியேற்புக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பலரும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப், ‘நீதித்துறையின் சுதந்திரத்தின்மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியிருப்பதாக’ விமர்சித்துள்ளார். முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ,‘தம் நாற்பது ஆண்டுகால நீதித்துறை வாழ்க்கையில் ரஞ்சன் கோகாயைப்போல ஒரு நபரைப் பார்த்த தில்லை’ என்றும் உமிழ்ந்துள்ளார்.

ஜனவரி 12, 2018 அன்றுஊடகங்களைச் சந்தித்து அப்போதையதலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளைமுன்வைத்த நான்கு மூத்த நீதிபதிகளில் ஒருவரான ரஞ்சன் கோகாய் அன்று என்னைப்போல யோக்கியன் எவனும் இல்லை என்று ஊடகங்களுக்கு முன்பு உதட்டைப்பிதுக்கிய இவர்தான் இன்று தன்மீது காவிச் சேற்றைப் பூசி நீதித்துறைக்கு இழுக்கு ஏற்படுத்தியுள்ளர். ஓய்வுப் பெற்ற நான்கே மாதங்களில் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டுள்ள இவர், நீதிபதி சந்துரு குறிப்பிடுவதுபோல பாரளுமன்றத்தில் நுழைந்த கொரோனோ என்பதுதான் நிதர்சனம்.

நீதிபதிகள், பணி ஒய்வுக்குப் பிறகான ஆதாயங்களுக்காக பணிகாலத்தில் சமரசம் செய்துகொள்ள நேரிடும் என்கிற காரணத்தால் இதுநாள் வரை, ஓய்வு பெற்ற நீதிபதிகள் எவரும் அரசு வழங்கும் பதவிகளை ஏற்கக்கூடாது என்கிற மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  மனித உரிமைகள் ஆணையம், சட்டக்குழு போன்ற சில அமைப்புகளுக்கு ஒய்வுப்பெற்ற நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டியது உண்மைதான் எனினும் அவை கூட சில ஆண்டுகளுக்குப் பிறகே நியமிக்கப்பட்டனர். ஓய்வுப் பெற்ற நான்கே மாதங்களுக்குள்,  கோகாய் நியமிக்கப்பட்டுள்ளது மரபு மீறிய செயல் மட்டுமல்ல.. இது நீதித் துறையின்மீது விழுந்த களங்கம்.

இவர் எழுதிய தீர்ப்புகள் மீதும் களங்கம் படிந்துள்ளது. இந்த உத்தம சீலரின் ஒரு தலைச்சார்பு வெட்ட வெளிச்சமாகியுள்ளது.  ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேட்டில் முகாந்திரமில்லை என்று இவர் தலைமையிலான அமர்வு பாஜக தலைமையிலான அரசுக்கு முட்டுக் கொடுத் தது அம்பலமாகியுள்ளது. தீர்ப்பில் உள்ள குளறுபடிகளையும் சுட்டிக்காட்டி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவையும் ஒத்திவைத்து, ஒத்தி வைத்து, இறுதியில் அரசுக்கு ஒத்திசைத்து தள்ளுபடி செய்ததும்  இவர் தலைமையிலான அமர்வுதான். 

பல்வேறு மர்மங்கள் நிறைந்த அயோத்தித் தீர்ப்பிலும் வரலாற்றிலேயே முதல்முறையாக தீர்ப்பு எழுதியவர் யார் என்றே தெரியாமல் எழுதி, பாஜகவின் நிலைப்பாட்டுக்குச் சாதகமாகவே இவர் செயல்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. 70 ஆண்டுகால அயோத்தி வழக்கை சர சர வென முடித்துவைத்து, அதற்கான சன்மானத்திற்கு விலைபோகியுள்ளார்.

தேசிய குடிமக்கள் பதிவேட்டு வழக்கில் அசாம் என் ஆர்.சி வழக்கை மேற்பார்வை செய்த காரணத்தாலும், இவரே அசாமைச் சேர்ந்தவர் என்பதாலும் இவர் விலகிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்காமல் குழப்பம் ஏற்படுத்தியதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. தன்மீது பாலியல் புகார் சுமத்திய பெண்ணை விசாரித்த அமர்வுக்குத் தாமே தலைமைதாங்கி, தாம் குற்றமற்றவர் என்று தீர்ப்பை வழங்கிக் கொண்ட உத்தமர் இவர். இவர் யோக்கியர் என்று இவரே சொல்லிக்கொள்வார்.

குற்றம் சுமத்திய பெண்ணும் நிறுத்தப்பட்ட சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு பணியில் தொடர்ந்து ஊமையாகிவிட்டார். சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா நள்ளிரவில் நீக்கப்பட்ட வழக்கிலும் அரசுக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து  370 நீக்கம் குறித்த வழக்கு, சிறைவைக்கப் பட்ட காஷ்மீர் அரசியல்வாதிகள் தொடர்பான வழக்குகள் என அனைத்தையும் உடனே விசாரிக்காமல் காலம் தாழ்த்தி விசாரித்து, தனக்கு வளமான எதிர்காலத்திற்குத் தீர்ப்பெழுதிக் கொண்டவர்.

‘பணி ஓய்வுக்குப் பிறகான நியமனங்கள் நீதித்துறையின் சுதந்திரத்தின் மீது ஏற்படுகிற வடு’ என்று மார்ச் 2019 அன்று தெரிவித்த இவர்தான், இன்று நமக்கு வடு-வாக தெரிகிறார். அசாம் மாநில முதல்வராக தன் தந்தை கேசாப் சந்திர கோகாயைப் போல  ரஞ்சன் கோகோய்க்கு அரசியல் மோகம் வந்துவிட்டதுபோலும். அரசியல் பிழைத்தவருக்கு அறம் கூற்றாகும். பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் கையால் என்னுடைய விருதை வாங்க மாட்டேன் என்று புறக்கணித்த தேசிய சட்டச் கல்லூரி மாணவி சுரபி கர்வாவைப்போல் இந்தியர்கள் இவர்களைப் போன்ற யோக்கியர்களைப் புறக்கணிக்க வேண்டும்.

தான் யோக்கியன் போல, நீதிபதிகளுக்கு ஒதுக்கப்படும் வழக்குகள் பட்டியலில் சார்புத்தன்மை இருக்கிறது. எனவே, தலைமை நீதிபதி மட்டுமே வழக்கின் இறுதி முடிவை உறுதி செய்ய முடியும் என்று அறம் பேசிய இவர்தான் பாஜகவுக்கு விலைபோயுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இக்காலத்தில் ஒரு கிருமி மேலவையில் அனுமதிக்கப் பட்டுள்ளது என்ற நீதிபதி சந்துரு அவர்களின் தீர்ப்பு பொருத்தமே ஆகும்.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 80(3)-ன் கீழ் இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூகப் பணிகளில் புலமைப் பெற்றவர்கள் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்படலாம். கோகாய் எந்தப் பிரிவைச் சார்ந்தவர்? சமூக விரோதப் பணி என்றொரு பிரிவு இன்னும் சேர்க்கப்படவில்லையே? என்ற நீதிபதி சந்துருவின் ஆதங்கம் நியாயமானதே.

காங்கிரசார் செய்தார்கள் என்று பாஜகவினர் செய்தாலும் குற்றம் குற்றமே.. குடியரசுத் தலைவர் 12 பேரை நியமன உறுப்பினராக மாநிலங்களவைக்கு நியமிக்க அதிகாரம் பெற்றிருக்கிறார். அந்த பன்னிரு பேரில் தற்போது நியமிக்கப்பட்டு  பொறுப்பேற்றுள்ள ரஞ்சன் கோகாய், நீதித்துறையைக் காட்டிக்கொடுத்த யூதாசாக இருப்பாரோ?! இவர் யோக்கியர்தான்.. நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கேரள கவர்னர் சதாசிவம், இப்போதைய எம்.பி. ரஞ்சன் கோகாய் போன்ற யோக்கியர்களால் நீதித்துறையின் மாண்பும் நேர்மையும் இப்போது கேள்விக்குறிகளாக இருக்கின்றன. ஜனாதிபதிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியே இப்போது ஜனாதிபதியின் கைப்பாவையாக மாறி உள்ளார். நீதிதேவதை வெட்கி தலைகுனிந்து விம்முகிறாள்.

Comment